பாக்யராஜ் திடீர் முடிவு - அதிர்ச்சியில் எழுத்தாளர்கள்!

நவம்பர் 02, 2018 584

சென்னை (02 நவ 2018): சர்க்கார் திரைப்பட கதை திருட்டு தொடர்பாக எழுத்தாளருக்கு நியாயம் கிடைக்க போராடிய இயக்குநர் பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குனர் கே.பாக்யராஜ் இன்று ராஜினாமா செய்துள்ளது எழுத்தாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முருகதாசிடம் நான் கெஞ்சியும் உடன்படாததால், வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின் மிகப் பெரிய படமான சர்கார் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தாலும், தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், என்னுடைய பணிவான வணக்கம்.

போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நமது சங்கத்திற்கு தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். நானும் மகிழ்ச்சியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு மனசாட்சியுடன் நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று சர்கார் படம் சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம், உண்மை இருப்பதாக தெரிந்ததால் அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கும் முக்கியமானவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து நல்லபடியாக நியாயமாக அதை செயல்படுத்த முடிந்தது. ஆனால் அதில் பல அசௌகரியங்களை நான் சந்திக்க வேண்டி வந்தது. அதற்கு முக்கிய காரணம் என்று நான் நினைப்பது, தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் நான் நேரடியாக தலைவர் பொறுப்புக்கு வந்தது தான் என்று நினைக்கிறேன்.

எனக்கு நேர்ந்த அசௌகரியங்கள், என்ன ஒழுங்கீனங்கள் என்ன என்பது குறித்து, சங்க நலன் கருதி நான் வெளியிட விரும்பவில்லை. சங்கத்தில் சில தவறான நடவடிக்கைகளை என் கவனத்திற்கு வந்தது. நிறைய விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய, சங்கத்துடன் சங்கத்தையும் சங்க உறுப்பினர்களின் நலனையும் காப்பாற்ற முடியாது என்று தோன்றுகிறது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளராக என்னுடைய தலையாய கடமையாக நினைக்கிறேன். அதற்கு ஒரே வழி நான் உட்பட என்னை மாதிரியே போட்டி இல்லாமல் பதவிக்கு வந்த எல்லோருமே ராஜினாமா செய்துவிட்டு முறையாக தேர்தலை நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வருவது தான். ஆனால் மற்றவர்களை, நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கிற நிலைமையில் இப்பொழுது தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நிறையபேர் அபிப்ராயப்படலாம். ஆனால் சங்கமே வீணாக போவதை விட செலவு தப்பில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்கிறது என்று பார்த்து விட்டு அதற்கப்புறம் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா மீண்டும் தலைவர் பதவியில் முறையாக நின்று மெஜாரிட்டி வாக்குகளுடன் வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையோடு செயல்படுகிறேன். இவ்வாறு பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...