சர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்!

நவம்பர் 08, 2018 701

சென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் நேற்று பிரம்மாண்டமாக திரைக்கு வந்தது. அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய், சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னர் கதை திருட்டு சர்ச்சை சர்காரை துரத்தியது. படம் திரைக்கு வந்ததற்கு பின்னர் அரசை விமர்சிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியிருந்ததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தனர்.

சர்கார் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, அரசியல் மோட்டிவிற்காக காண்பித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது; இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ``படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா. நல்ல கதையா திருடுங்க” என்றும் சர்கார் படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்

ஆளும் கட்சியினரின் விமர்சனத்தைத் தொடர்ந்து சர்கார் இன்றைய நாளின் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து திருப்போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும். மேல்மட்ட ஆலோசனைக்குப் பின் படத்தின் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது வழக்கு பதியப்படும் ”என்று கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...