சென்னையில் பிரபல நடிகை தற்கொலை - பின்னணி என்ன?

நவம்பர் 29, 2018 625

சென்னை (29 நவ 2018): சென்னையில் பிரபல நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ராதாநகர், 3வது தெருவில் குடியிருந்தவர் நடிகை ரியாமிகா (26). இவர், `குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', `எக்ஸ் வீடியோஸ்', `அகோரி' ஆகிய படங்களில் நடித்தவர். இவர், தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நடிகை ரியாமிகாவும் அவருடை உறவினர் பிரகாஷும் சென்னையில் குடியிருந்துவந்தனர். ரியாமிகா, தினேஷ் என்பவரை காதலித்துவந்துள்ளார். இந்த நிலையில், படவாய்ப்பே இல்லாததால் ரியாமிகா, சில மாதங்களாக மனவருத்தத்தில் இருந்துவந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, காதலன் தினேஷுக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். நேரமாகிவிட்டதால் காலையில் வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். அதன்பிறகு பிரகாஷுக்கும் ரியாமிகாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தன்னுடைய அறைக்கு ரியாமிகா சென்றுவிட்டார்.

காலையில் கண்விழித்த அவர் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். அதன்பிறகு மீண்டும் அறைக்குச் சென்று தூங்கிவிட்டார். அப்போது, தினேஷ் வீட்டுக்கு வந்துள்ளார். தினேஷும் பிரகாஷும் சேர்ந்து சாம்பார் வைத்து சைவ சமையல் செய்துள்ளனர். அதன்பிறகு சாப்பிடுவதற்காக ரியாமிகாவை எழுப்ப அறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால், பின்பக்க ஜன்னல் வழியாக அவர்கள் அறையை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் ரியாமிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நாங்கள் சென்று ரியாமிகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், பிரேதப் பரிசோதனைக்காக அவரின் சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து வழக்கு தினேஷ் மற்றும் பிரகாஷ் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...