கனா - சினிமா விமர்சனம்!

டிசம்பர் 21, 2018 761

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜ் காமராஜ் இயக்கியுள்ள பெண்கள் கிரிக்கெட் தொடர்பான படம் தான் கனா.

ஸ்போர்ட்ஸ் கதை என்றாலே டெம்ப்ளேட்டாக ஒரு சில ஒன் லைன் இருக்கும். அதே போல் தான், தமிழகத்தில் குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், எப்படி சர்வதேசப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கின்றார் என்பதே இந்த கனா.

படத்தில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு என்று மட்டுமில்லாமல், பல எதிர்ப்புகளை மீறி ஒரு விவசாயி தன் மகளை எப்படி இந்தியாவே போற்றும் ஒரு வீரங்கனையாக மாற்றுகிறார் என்பதை மிக உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளது கனா.

கனா சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்கும் படம், அதுவும் தன் நண்பர் அருண்ராஜ் காமராஜிற்காக தயாரித்துள்ள படம். ஏதோ நண்பர் என்பதற்காக அவர் வாய்ப்பு கொடுத்தது போல் தெரியவில்லை. கண்டிப்பாக அருண்ராஜிடம் அதற்கு அனைத்து தகுதியும் உள்ளது, இந்த சிறு பட்ஜெட் படத்தையே எல்லோரும் கனேக்ட் செய்வது போல் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. காக்கா முட்டை லெவலில் இருந்து படத்திற்கு படம் தன்னை அடுத்த கட்டத்திற்கு உயரே எடுத்து செல்கின்றார் என்றே சொல்லலாம்.

அதிலும் இதில் கௌசல்யாவாகவே வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்காக அவர் எடுத்த பயிற்சி, மேலும் அவர் மேற்கொள்ளும் பவுலிங் ஸ்டைல் ரசிக்க வைக்கின்றது, பல பெண்களுக்கு இந்த கௌசல்யா ரோல் மாடலாக தான் இருப்பார்.

விளையாட்டு என்று மட்டும் இல்லாமல் அதில் அழகாக விவசாயத்தை கொண்டு வந்த விதம் பாராட்டத் தக்கது. இந்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் போல் சீனியர் நடிகரை நடிக்க வைத்திருப்பதன் மூலம் பலருக்கும் அவருடைய வலிகள் சென்றடையும். ஆனால், விவசாயம் குறித்து சமீபத்தில் வெளிவரும் அனைத்து படங்களிலும் பேசப்பேச, கொஞ்சம் அதிகமாவே செயற்கை தனம் வெளிப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் கிளைமாக்ஸ் ஒன்றிற்காகவே எழுந்து நின்று படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டலாம். நிஜ மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வு.  அட சிவகார்த்திகேயன் இத்தனை மெச்சூரான ரோலா? என்று அவரும் கேமியோவில் சபாஷ் அள்ளுகிறார். படத்தின் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ரசிக்கும் ரகம், குறிப்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். பெரிய பட்ஜெட் கதையை இந்தச் சிறு பட்ஜெட்டில் அடக்கி அழகாக எடுத்த விதம் சூப்பர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் கடும் உழைப்பு தெரிகின்றது.

பெண்கள் விளையாட்டு குறித்தும் அதன் வெற்றி குறித்தும் வந்திருக்கும் படம். கனா ஏமாற்றவில்லை. பார்க்கலாம்!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...