பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு சிக்கல்!

ஜனவரி 05, 2019 407

சென்னை (05 ஜன 2019): தமிழக அரசாணையை மீறியதாக ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் மீது புகார் எழுந்துள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: வரும் 10-ம் தேதி ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த திரைப்படங்கள் அரசு விடுமுறை அல்லாத தினங்களான 10 மற்றும் 11-ம் தேதிகளில் 6 காட்சிகளாக திரையிடப்பட உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான செயல். அரசு விடுமுறை அல்லாத தினங்களிலும், பிற விடுமுறை அல்லாத தினங்களிலும் 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்ற அரசாணை இருக்கிறது. அரசாணையை மீறி 6 காட்சிகள் திரையிடுவதால் சட்டவிதிமீறல்கள் ஏற்படவும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிடப்படுவது ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் உறுதியாகியுள்ளது. அதனால் 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 காட்சிகளுக்காக வசூல் செய்த கட்டணங்களை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து விஸ்வாசம், பேட்ட படங்களின் சிறப்புக் காட்சிகள் திட்டமிட்டபடி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...