ரஜினியின் பேட்ட வெளியீடு தள்ளிப் போகிறது!

ஜனவரி 08, 2019 381

சென்னை (08 ஜன 2019): ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை தெலுங்கில் வெளியிட திரையரங்குகள் கிடைக்காததால் வெளியீடு தள்ளிப் போகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்துக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் போதிய திரையரங்குகள் கிடைத்தாலும் தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

ஜனவரி 10-ம் தேதியில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் முதலில் பேட்ட' படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் படம் வெளியிடப்படும் என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால், பாலகிருஷ்ணா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களுக்கே சுமார் 90% அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளன.

இருப்பினும் பேட்ட படக்குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றே சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் விஸ்வாசம் படக்குழுவினர் தங்களுடைய படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...