சர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்!

ஜனவரி 31, 2019 864

பல வருடங்களுக்குப் பிறகு (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனன் இணைந்துள்ள படம் சர்வம் தாளமயம்.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் ஒரு மிருதங்கம் இசை கருவி உருவாக்கும் பாரம்பரியத்தில் இருந்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் அவர் விஜய்யின் ரசிகர். அதே போல இப்படத்தில் அதி தீவிர ரசிகர்.

கல்லூரி, கட் அடித்தல், பொழுதுபோக்கு என சுற்றும் அவருக்கு மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. இதற்காக அக்கலையில் பிரபலமாக இருக்கும் நெடுமுடி வேணுவை அணுகுகிறார்.

பாரம்பரியம், கலாச்சாரம், தாழ்த்தப்பட்டவர்கள் என காரணம் சொல்லி ஜி.வி.பிரகாஷை ஒதுக்கிறார்கள். ஒரு பக்கம் காதல், மறுபக்கம் இசை கனவு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.

இந்நிலையில் கர்நாடக இசை மேலாதிக்க பிரிவினருக்கு மட்டும் என சொல்வோர் மத்தியில் அவர் தன் லட்சியத்தை அடைய போகையில் ஒரு சதி நடக்கிறது. இதனை கடந்து அவரின் ஆசை நிறைவேறியதா, காலம் காலமாக இருக்கும் கர்நாடக இசை மற்றவர்களுக்கும் கிடைக்குமா என்பதே கதை.

அஜித்தை வைத்து கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தை கொடுத்த ராஜிவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார். அவரின் படம் என்றாலே தனி பாணி என்பதை இப்படமும் காட்டுகிறது. தற்போது இருக்கும் சாதிவெறியர்களை பக்குவபடுத்தும் விதமாக அவர் இதில் கதை சொல்லியிருக்கிறார்.

அதே வேளையில் கர்நாடக இசையின் நுட்பத்தையும், அழகையும், மிருதங்கம் செய்யும் தொழிலில் இருப்பவர்களின் வாழ்க்கை பின்னணியையும் தெளிவாக எடுத்து சொல்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் தன் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அவரின் படங்களில் இது முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்திலேயே இவர் விஜய் ரசிகர் மன்றம் என்பதால் அதற்கென தனி பாடல்.

அதுமட்டுமல்ல, சினிமாவிலிருந்து முதலமைச்சர்களாக வந்தவர்கள் பற்றி சொல்லிவிட்டு அடுத்து விஜய்யை காட்டுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன என உங்களுக்கு புரிந்திருக்கும் தானே. இக்காட்சி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பிரபல நடிகரான நெடுமுடி வேணு இப்படத்தில் ஒரு நிஜ கலைஞர் போலவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். கர்நாடக இசை தங்களுக்கே சொந்தம் என ஆதிக்கம் செய்யும் இவர் கடைசியில் திறமை ஆதிரிக்கும் விதமாக மனம் இறங்குகிறார். படம் முழுக்க அவரின் அனுபவம் பேசுகிறது.

அபர்ணா முரளிக்கு மிகக்குறைவான காட்சிகள் என்றாலும் மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவது கொஞ்சம் இண்ட்ரஸ்டிங். ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி செய்யும் டிவி சானல் வியாபாரத்தை தோலுரித்தது பலரையும் சிரிக்கவைத்தது. அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியை நடிக்க வைத்தது நல்ல பொழுதுபோக்கு.

மதன் கார்க்கியின் பாடல்கள் வரிகள் படத்தின் கதையோடு பொருந்திவிடுகிறது. ரஹ்மான் மீண்டும் ராஜிவ் மேனனுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். படத்திற்கே உரியவகையில் மெல்லிசை பாடல்களை கொடுத்தது கதைக்கு கூடுதல் சிறப்பு.

இசை ரசிகர்களுக்கு இனிமையான விருந்து.

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...