நடிகர் ஆர்யா நடிகை சயிஷா திருமணம் உண்மையா?

ஜனவரி 31, 2019 639

சென்னை (31 ஜன 2019): நடிகர் ஆர்யா நடிகை சாயிஷா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே, கலாப காதலா என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இந்நிலையில், சமீபகாலமாக நிஜ வாழ்க்கையிலும் சரி திரைத்துறையிலும் சரி தோல்விகளை சந்தித்து வருகிறார்.

கடம்பன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறிது இடைவேளை விட்ட ஆர்யா பின்னர் சின்னத்திரையில் முகம் காட்டினார். தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியின் மூலம் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. 16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக 3 பெண்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். ஆனால், வெறும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் துணைவியை தேர்வு செய்ய முடியாது என்று கூறிய ஆர்யா, எந்த முடிவும் எடுக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்.

இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரத்தில் ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா சைகல் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவும் ஆர்யா அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்வு செய்யாததற்கு காரணம் என்று கோலிவுட் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வராத நிலையில் இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...