சபரிமலை விவகாரத்தில் கருத்து - விஜய் சேதுபதியை கொண்டாடும் கேரள மக்கள்!

பிப்ரவரி 05, 2019 521

திருவனந்தபுரம் (05 ஜன 2019): பெண்கள் மீது பரிவு காட்டி பேசிய விஜய் சேதுபதியை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதி இயக்குநர் சீனு ராமசாமியின் `மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் சபரிமலை விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில், நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளைச் சந்திக்கின்றனர். நம் அனைவருக்கும் தெரியும் அந்த வலி எதனால் வருகின்றது என்று. நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம். அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என விஜய் சேதுபதி கருத்து தெரிவித்தார்.

இதற்குப் பிறகு கேரளாவில் உள்ள பலர் அவரின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறிமாரப் பட்டு வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...