இயக்குநர் பாலா மீது விக்ரம் அதிருப்தி - மகன் நடித்த வர்மா வெளிவராது என அறிவிப்பு!

பிப்ரவரி 07, 2019 469

சென்னை (07 பிப் 2019): நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் அறிமுமாகிய வர்மா படத்தை பாலா இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் திரைக்கு வராது என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

படத்தை விக்ரம் பார்த்ததாகவும், அவருக்கு திருப்தி இல்லாததால் வேறு இயக்குநர் மூலம் படத்தை மீண்டும் இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...