தேவ் - திரைப்பட விமர்சனம்!

பிப்ரவரி 14, 2019 443

கார்த்தி சமீபத்தில் காற்று வெளியிடை தவிர தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தேவ்.

எதற்கும் அஞ்சாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை அழகாக வாழ்கிறார் கார்த்தி. கார்த்தியுடன் நண்பர்கள் அமிர்தா, ஆர் ஜே விக்கி ஆகியோரும் பயணிக்க, விக்கிக்கு கார்த்தியை எப்படியாவது ஒரு பெண்ணுடன் கமிட் செய்ய வேண்டும், அப்போது தான் நாம் நம் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்று நினைக்கின்றார்.

அதற்காக ராகுல் ப்ரீத்சிங்கிற்கு பேஸ்புக்கில் ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க, ராகுல் ப்ரீத் ஒரு கார்ப்ரேட் கம்பெனியே நடத்தும் அளவிற்கு பிஸி.

ஆனால் அவர் சென்னைக்கு கம்பெனி விஷயமாக வர, கார்த்தி அவரை சந்திக்க, பிறகு என்ன கார்த்தி ராகுல் மனதை கவர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

கார்த்தி அனைத்து செண்டர் ஆடியன்ஸுக்கான ஹீரோவாக இருக்கின்றார், காலரை தூக்கிவிட்டு படு லோக்கலாகவும் கலக்குகின்றார், அதே நேரத்தில் கூலர்ஸை மாட்டிக்கொண்டு மல்டி மில்லினியர் பையனாகவும் ஜொலிக்கின்றார், இந்த முறை மல்டி மில்லியனியர் மகனாக இந்த தேவ்வில் தோன்றியுள்ளார், வாழ்க்கையில் எதற்கும் கவலைப்படமால் ஜாலியாக பொழுதை கழிக்கும் போதும் சரி, தன் நண்பர்களுக்கு உனக்கு பிடித்த வாழ்க்கையை தேடு என்று அவர்களை நல்வழிப்படுத்துவது, ராகுல் ப்ரீத்துடன் ரொமான்ஸ் அடிப்பது என கலக்கியுள்ளார்.

ராகுல் ப்ரீத்சிங் இதுவரை நடித்த படங்களிலேயே அவருடைய கதாபாத்திரத்திம் கொஞ்சம் வலுவாக உள்ளது இந்த படத்தில் தான், எந்த ஆண்களையும் நம்பாமல் பணத்தை மட்டும் தேடும் பெண்ணாக இருந்துக்கொண்டு, அவர் வாழ்க்கையில் வரும் காதலை அவர் கையாளும் விதம் என மேல்தட்டு பெண்ணாகவே வாழ்ந்துள்ளார்.

ஆனால், இப்படி ஒரு காதல், மோதல் என இருக்கும் கதையை இன்னுமே கூட கொஞ்சம் ஜாலியாக எடுத்திருக்கலாம், படத்தின் முதல் பாதியில் ஆர் ஜே விக்கி, அமிர்தாவுடன் சேர்ந்துக்கொண்டு கார்த்தி அடிக்கும் லூட்டி, ராகுல் ப்ரீத்சிங்கை காதலிக்க வைக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கின்றது.

அப்படியே இரண்டாவது பாதிக்கு வந்தால் அங்கு தான் பிரச்சனை, ஏனெனில் கார்த்தி-ராகுல் ப்ரீத் சிங் இருவருக்குமே எந்த ஒரு இடத்திலுமே ஈகோ என்பதே இல்லை, பெற்றோர்களும் சம்மதித்துவிட்டனர், படம் முழுவதும் ஜாலியாக சுற்றிக்கொண்டு கிளைமேக்ஸில் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு ஈகோ மோதலை காட்டி அவர்கள் காதல் வேண்டாம் என சண்டை செய்வது எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

படத்தின் கிளைமேக்ஸ் எவரெஸ்ட் ஏறும் காட்சி ரசிக்க வைக்கின்றது, அட இதையே இரண்டாம் பாதி முழுவதுமே எடுத்திருக்கலாமே என்று சொல்ல வைக்கின்றது, என்ன காற்று வெளியிடை பார்ட் 2 பார்த்தது போல் இருந்திருக்கும்.

டெக்னிக்கலாக படம் பலமாகவே உள்ளது, அதிலும் ஒளிப்பதிவு ஏதோ ஹிந்தி படம் பார்ப்பது போல் உள்ளது, ஹாரிஸின் இசையில் ஏற்கனவே பல படத்தில் கேட்ட பாடல்கள் போலவே தான் அனைத்து பாடல்களுமே உள்ளது, பின்னணியும் அப்படியே, என்ன வழக்கம் போல் அது பிடிக்கவும் செய்கின்றது.

சுமார் ரகம்.

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...