சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்!

மார்ச் 29, 2019 8252

சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரே ஒரு படம் பலரை திரும்பிப் பார்க்க வைத்தது அது ஆரண்ய காண்டம். ஆனால் அதற்குப் பிறகு வேறு எந்த படமும் இயக்கவில்லை தியாகராஜன் குமாரராஜா. ஆனால் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் மொத்தம் 4 கதைகள், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையதா என்றால், அதுவும் இல்லை. ஆனால், ஒருவர் செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு நன்மையா? தீமையா? ஏன் வாழ்க்கையில் இது நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்கு வாழ்க்கை அப்படியே தான் போகும் நாம் தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.

சூப்பர் டீலக்ஸ் இப்படத்தை கதையாக எங்கும் விமர்சனம் செய்ய முடியாது, காட்சியின் நகர்வுகளாகவே சொல்ல முடியும். 5 சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பதற்காக ரெடியாக, அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா (ரம்யா கிருஷ்ணன்) வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.

சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.

விஜய் சேதுபதி திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, இந்த சமூகம் அவரை மிக கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கின்றது.

சரி இப்போது முதல் பேராவில் சொன்ன கதைக்கு வருவோம், டிவியை உடைத்து ஒரு நண்பன் ஓடிவிட்டான், மாலைக்குள் புது டிவி வாங்க வேண்டும், இல்லையென்றால் அப்பா தன்னை கொன்றே விடுவார் என்று அச்சப்படும் சிறுவன், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு டிவி வாங்க அலைகின்றனர்.

இந்த 4 கதைகளுக்கான முடிவு என்ன என்பது தான் சூப்பர் டீலக்ஸ் என்றாலும், இந்த 4 கதைகளும் சொல்ல வரும் கருத்துகள் தான் படத்தின் ஹைலைட். அதிலும் வசனம் தான் தியாகராஜா குமாரராஜா படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ், இதில் கூடுதலாக மிஷ்கின், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

பஹத் தன் மனைவி இப்படி செய்துவிட்டாள் என்ற கோபம் ஒரு புறம் இருக்க, இதிலிருந்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார். அதிலும் ஜாதி வெறி எவ்வளவு கொடியதோ அதே போல் நாட்டு பற்று, மொழி பற்று அனைத்தும் கொடியது தான், ஜாதி வெறி தவறு என்றால் இதுவும் தவறு தான் என அவர் பேசும் வசனம் எல்லாம் செம்ம.

விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவது, வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட, அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போலிஸையே அவர் அடித்து தலையில் அடித்து சாபம் விடுவது, கடைசியில் கடவுளையே உலகம் என நம்பியிருக்கும் மிஷ்கினிடம் தன் பாவங்களை சொல்லி அழும் இடத்தில் விஜய் சேதுபதி தனித்து நிற்கின்றார்.

போலிஸ்காரராக பக்ஸ் நடித்துள்ளார், அப்படி சொல்வதை விட மிரட்டியுள்ளார், சிரித்துக்கொண்டே அவர் செய்யும் விஷயம் எல்லாம் நமக்கே பயத்தை ஏற்படுத்துகின்றது, அவர் மேல் கடும் கோபத்தையும் உண்டாக்குகின்றது, ஒரு இடத்தில் ‘என் பொண்டாட்டி பத்தினி அவ சாபமே பலிக்காது, இவ சாபம் எங்க பலிக்கும்’ என்று விஜய் சேதுபதியை கிண்டல் செய்துவிட்டு அடுத்த காட்சியிலேயே பக்ஸுக்கும் நடக்கும் விஷயம், அதே போல் தன் கள்ள உறவு வைத்திருந்த தன் மனைவி சமந்தாவை பார்த்து பஹத் ஆமா இவ பெரிய பத்தினி இவ சொன்னா கரெண்ட் வந்துரும் பாரு, என்று சொல்லி முடித்ததுமே கரெண்ட் வருவது என தியாகாராஜா குமாரராஜா டச் பல இடங்களில் ஜொலிக்கின்றது, குறியீடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

மேலும், படத்தில் டிவிக்காக அலையும் அந்த மூன்று சிறுவர்கள், அற்புதம் செய்துள்ளனர், அத்தனை பிரச்சனைகளிலும் கேஷுவலாக இருப்பது, ‘ஏன் காஜி நீ ஏண்டா இவ்வளவு காஜியாக இருக்க’, அதெல்லாம் முடியாது எல்லாம் முடிஞ்சுருச்சு இப்ப நா பிட்டு படம் பாக்கனும் என்று சொல்வது என கலக்கியுள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக வந்தாலும், கடைசியில் லட்சம் பேர் ஆபாச படம் பார்க்கின்றனர், அவர்களுக்கு இல்லாத குற்ற உணர்வு அதில் நடித்த எனக்கு ஏன் வரவேண்டும் என அவர் சொல்லும் இடம் சிறப்பு.

தமிழ் சினிமாவின் மற்றும் ஒரு மைல்கள் இந்த சூப்பர் டீலக்ஸ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...