மீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்!

ஜூலை 10, 2019 705

மும்பை (10 ஜூலை 2019): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் கேரள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என உமாதாதன் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார் டி.ஜி.பி. ரிஷிராஜ். மேலும் தொடர்ந்துள்ள அவர், “அது எப்படி நடந்திருக்கும் என நான் உமாவிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர், ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று அரசல் புரசலாக செய்திகள் பரவிய நிலையில் ஒரு போலீஸ் அதிகாரியே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...