கமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்!

நவம்பர் 18, 2019 337

சென்னை (18 நவ 2019): நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கமலின் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர். நடிகர் வடிவேலு, அரங்கின் உள்ளே நுழையும் போதே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

வடிவேலு மேடையேறி பேசும் போதும் ரசிகர்கள் ஆரவாரம் குறையவில்லை. அவர் பேசியதாவது, “60 வருஷமா அவர் எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். அவருக்கு எத்தனை ஏவுகணைகள் பறந்திருக்கும், எத்தனை பாம் வச்சிருப்பாங்க. அதையெல்லாம் தாண்டி பாயும் இடத்தில் பாய்வதும் மறைய இடத்தில் மறைவதும் இப்படி பல வித்தைகளை காண்பித்து நடிகர் கமல்ஹாசன் இன்று இந்த இடத்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழகம்.

தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமலஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி சொல்லி இருந்தார். நான் முந்தா நாள் இரவே அங்கு போய் இருந்து விட்டேன்.

பின்னர் கமல்ஹாசன் என்னிடம் “நாளை காலை விடிந்தவுடன் தானே... உங்களை வரச் சொன்னேனே... ஏன் முன்பே வந்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான் “நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த உடனேயே எனக்கு விடிந்துவிட்டது” என்று சொன்னேன்” என்று கூறினார்.

இதற்கிடையே கமலின் தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் வடிவேலு நடிப்பதாக செய்தி வெளியானது. அதனை தொகுப்பாளர் கோபிநாத் உறுதி செய்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...