வலையில் சிக்கிய மீன்

நவம்பர் 19, 2019 521

சினிமா, டிவி என திரையில் நாடகங்கள், திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசித்தாலும் மேடை நாடகங்களுக்கான வரவேற்பு இன்றும் குறையாமலே உள்ளது.

மக்களுக்காக கலை, பண்பாடு, ஆன்மீக நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவரும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்று வருகின்றன. மேலும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தி வரும் மேடை நாடகங்களுக்கு மக்கள் தொடர்ந்து சிறப்பான வரவேற்ப்பை அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 17 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய வலையில் சிக்கிய மீன் என்ற நாடகத்திற்கு அமோக வரவேற்பினை அளித்தனர் பார்வையாளர்கள்.

கணவனை இழந்த வனஜாவுக்கு பருவ வயதில் ஒரு மகன் ஒரு மகள். வேலைக்குடகம்ச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உதவுகிற ஒரு அண்ணன் என ஒரு நடுத்தரக் குடும்பம். வனஜா பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிலையத்தில் தலைமை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அவளது இரண்டு பிள்ளைகளும் சதாசர்வகாலமும் ஸ்மார்ட் போனிலும் லேப்டாப்பிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். வனஜா பணியாற்றும் நிறுவனம் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள சொல்லி வலியுறுத்துவதால் வனஜா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார். அதுவரை பணியாற்றியதற்கு கிடைத்த ஓய்வூதியம் 35 லட்சம் ரூபாயை வங்கிக்கணக்கில் வைக்கிறார். வனஜாவின் அறியாமை, பிள்ளைகளின் சமூக ஊடக அடிமைத்தனம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழையும் ஒருவன் மொத்த பணத்தையும் அபேஸ் செய்வதுடன் வனஜாவின் மகளுடன் உறவும் கொண்டு விடுகிறான். வனஜாவின் மகளுடன் காதலில் ஈடுபட்ட காட்சிகளை இணையத்தில் வெளியிடவும் செய்கிறான். அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் தடுமாறி நிற்கும் குடும்பம் சைபர் கிரைம் காவல் அதிகாரியின் உதவியுடன் மீண்டு கரை சேர்வதே வலைக்குள் மீன் நாடகத்தின் கதை.

ஒரு சாமானிய நடுத்தரக் குடும்பத்திற்குள் தொழில்நுட்பம் உருவாக்குகிற உறவுச் சிக்கல், வாழ்க்கைச் சிக்கல், இழப்புகள் ஆகியவற்றை மெல்லிய நகைச்சுவையுடன் நுட்பமான அறிவியல் தகவல்களுடன் சித்தரிக்கிறது. இணையதளங்களையும் சமூக ஊடகங்களையும் கவனமாக பயன்படுத்துவதற்கான தெளிவை இந்த நாடகம் உருவாக்குகிறது.

பாத்திமா பாபு, அம்பி ராகவன், சோ ரமேஷ், ஹேமா மாலினி, கிரீஷ் சங்கர், ஆதித்யா உள்ளிட்டோர் இந்நாடகத்தில் நடித்திருந்தனர். அரங்க அமைப்பு பாஸ்கரன், இசைக்கலவை கிச்சான், மேக்கப் குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்நாடகத்தினை டி.வி.ராதாகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அவர் பேசும் போது சென்னை நாடகக்கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரசித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...