புலி படத்துக்குத் தடை - தஞ்சை நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்!

செப்டம்பர் 23, 2015 1353

தஞ்சாவூர்: கத்தி பட விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், புலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல் வடிவேல் உதவியுடன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இனிமேல் இயக்கி, தயாரித்து வெளிவரவுள்ள அனைத்து படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. மனுவை நீதிபதி (பொ) ராஜசேகர் விசாரணை செய்து வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தைவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கத்தி திரைப்படம் வெளியாகும் முன்பு தாகபூமி என்ற தன்னுடைய குறும்படத்தை திரைப்படமாக வெளியிட காத்திருந்தார். இந்நிலையில் தனது குறும்படத்தை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...