ரஜினியின் தர்பார் தோல்வி – உண்ணாவிரதம் இருக்க முடிவு!

Share this News:

சென்னை (03 பிப் 2020): தர்பார் பட தோல்வியால் விரக்தியில் உள்ள விநியோகஸ்தர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என விநியோகஸ்தர்கள் சிலர் அறிவித்துள்ளார்கள்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது.

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்கு நேரில் சென்று பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல இன்றும் தர்பார் படத்தை வட ஆற்காடு – தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சென்னையில் ரஜினியின் இல்லம் அமைந்துள்ள சாலை வழியே செல்ல முயன்றபோது விநியோகஸ்தர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் விரக்தியில் உள்ள விநியோகஸ்தர்கள் வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply