FIR திரைப்படம் கத்தரில் தடை ஏன்? – விமர்சனம்!

Share this News:

முதல் பாதியில் ஐ எஸ் ஐ எஸ், ஜாகிர் நாயக், மலேசியா, இலங்கை குண்டுவெடிப்பு, அபூ பக்கர் பாக்தாதியின் தமிழக ப்ராடக்ட் அபூபக்கர் அப்துல்லாஹ், அவனைக் கண்டுபிடிப்பதற்காக என் ஐ ஏ நடத்தும் கூகுள் இன்டெலிஜென்ஸ் போராட்டம். முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த ஹிஜாப் அணிந்த ஒரு என் ஐ ஏஜன்ட், முஸ்லிம் என்பதால் வேலை கிடைக்காமல் அலையும் ஐஐட்டி கோல்ட் மெடலிஸ்ட் முஸ்லிம் ஹீரோ, அவர் அம்மா, கொஞ்சம் மசாலாவுக்காக ஹீரோவுக்கு ஒரு ப்ராமண காதலி. ஹீரோ தான் அபூபக்கர் அப்துல்லாஹ் என கைது. இடைவேளை.

ஜாகிர் நாயக்கின் கெமிக்கல் ஃபேக்டரி, ஈராக், இரசாயன வாயு, ஹீரோ தப்பித்தல், கொஞ்சம் சென்டிமென்டுக்காக ஹீரோவின் அம்மா சாவு, ஹீரோ கோபத்தில் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்காக இரசாயன வாயு தயாரிக்க உதவுதல், சின்ன வயசுலேயே சிரியா சென்று அல்லா தான் ஒரே கடவுள் என்று பயமுறுத்தி இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டு அபூபக்கர் பாக்தாதியிடமிருந்து நேரடியாக பயிற்சி பெற்று இந்தியாவுக்கு வந்து 8 ஆண்டுகளாக தீவிரவாத வேலைகள் செய்து வரும் இந்து தான் அபூபக்கர் அப்துல்லாஹ் என்ற ட்விஸ்ட், சென்னையை மொத்தமாக விஷ வாயுவில் முடிக்க ஐ எஸ் ஐ எஸ் போடும் திட்டம், ஜாகிர் நாயக் அப்பாவி என்ற ட்விஸ்ட், அவருடைய போதனையைத் தவறாக விளங்கி ஐ எஸ் ஐ எஸ்ஸில் சேர்ந்த அவர் மகன் என்ற ட்விஸ்ட், ஹீரோ தயாரித்த விஷ வாயுவைச் சோதிக்க தமக்கு ஒத்துழைக்காத அப்பாவையே சுவாசிக்க வைத்து கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொல்லும் மகன் என்ற ட்விஸ்ட், கெமிக்கல் ஃபேக்டரியையே தகர்த்து தீவிரவாத திட்டத்தைத் தவிடுபொடியாக்க பிரதமருடன் நேரடியாக உட்கார்ந்து கடலை போட்டு கொண்டே செயல்படுத்தும் என் ஐ ஏ தலைவர், அபூபக்கர் அப்துல்லாஹ்வைத் தீர்த்து கட்டுவதோடு கசிய விட்ட விஷ வாயுவை ஹீரோவே உயிரைப் பணயம் வைத்து நிறுத்துதல், பிரதமருக்கு லைவிலேயே போட்டு காட்டி ட்ரோன் மூலம் கெமிக்கல் ஃபேக்டரியை என் ஐ ஏ தலைவர் தகர்த்தல். அதில் ஹீரோ உயிர்த்தியாகி ஆதல். இப்படி ட்விஸ்டுகளோடு ட்விஸ்டுகளாக இரண்டாம் பாதியில் பார்வையாளர்களைக் கிறங்கடித்து ஒரு வழியாக சுபம்.

ஃபைனல் டச் – இந்திய மக்களின் முன்னால் தீவிரவாதியாக ஊடகத்தில் காட்டப்பட்ட ஹீரோ உண்மையில் என் ஐ ஏ அதிகாரி. ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி அபூ பக்கர் அப்துல்லாஹ்வைக் கண்டுபிடிப்பதற்காக போடப்பட்ட மாஸ்டர் ப்ளான் அது. இந்திய நாட்டைக் காப்பாற்றுவதற்காக தெரிந்து கொண்டே தம் உயிரைத் தியாகம் செய்த நல்ல முஸ்லிம்தான் ஹீரோ. மக்களிடையே தீவிரவாதியாகவே அடையாளம் ஆகி இவ்வாறு உயிர் இழப்பவர்களில் பலர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் நல்ல முஸ்லிம்கள். அவர்கள் மக்களிடையே தீவிரவாதிகளாகவே தான் காட்டப்படுவர். ஒரு ஆத்மாவைக் கொலை செய்தால் மொத்த உயிர்களையுமே கொன்றதற்குச் சமம்; ஒரு ஆத்மாவைக் காப்பாற்றினால் மொத்த மனித வர்க்கத்தையுமே காப்பாற்றியதற்குச் சமமென்ற குர்ஆன் வசனத்தை வீரமாக முழங்கி உயிர்விடும் ஹீரோ. கூடுதல் என்டர்டெயின்மென்டுக்காக மோடி வடிவில் பிரதமர் கதாபாத்திரம்; இன்னும் கூடுதல் என்டர்டெயின்மென்டுக்காக என் ஐ ஏ தலைவருடன் அவர் அடிக்கடி செஸ் விளையாடுவதாக வசனம். உண்மையைப் பட்டவர்த்தனமாக உடைத்து பேசும் திராவிட புரட்சி அரசியலுக்காக, நாட்டுக்குத் தியாகம் செய்த ஹீரோ இம்ரான் ஒரு என் ஐ ஏ அதிகாரி என்ற உண்மையை வெளியிட வேண்டுமென என் ஐ ஏ அதிகாரி கேட்கும்போது, இம்ரானா இருந்தாலும் அபூபக்கர் அப்துல்லாஹ்வாக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதானே; அப்படியே இருக்கட்டும் என அசால்டாக அவர் சொல்லி செல்லும் வசனம்.

இந்த மொக்கை டப்பாவை எதற்காக கத்தரில் தடை செய்தார்கள் என்று தலை முடியைப் புடுங்கி கொள்வதற்காகவே ஒருமுறை இப்படத்தைப் பார்க்கலாம். படம் பார்த்து தடைக்கான காரணமென்ன இருக்கிறது என்பதை யாராவது கண்டுபிடித்து அனுப்பினால் நன்றியுடன் தனிப்பதிவாக போடுகிறோம்.

படக்குழுவினருக்குக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டியதொரு விசயம். ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரித்துத் தொலையுங்கள். அதற்காக பிரதமரையும் என் ஐ ஏ-வையும் இப்படி வைத்து செய்திருக்க வேண்டாம். அவ்வளவு கஷ்டப்பட்டு விஷவாயு கசிவை ஹீரோ நிறுத்தியிருக்க, அவர்கள் இருவரும் கூலாக அவர்கள் இடத்தில் உட்கார்ந்திருந்து கொண்டு ராக்கட் மூலம் கெமிக்கல் ஃபேக்டரியைத் தகர்த்து விஷ வாயுவை மொத்தமாக காற்றில் பரவச் செய்து சென்னை மக்களை மட்டுமின்றி படம் பார்க்கும் மொத்த பார்வையாளர்களையும் சேர்த்து படுகொலை செய்துவிடுவதாக காட்டியிருக்கிறீர்களே. நியாயமா இது?

சொல்ல விட்டுப்போன ஒரு விசயம். படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாம். என்னத்த சொல்ல!


Share this News:

Leave a Reply