நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் தொடர்பு? – இருவர் அதிரடி கைது!

2151

சென்னை(25 ஆக 2021): நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக நடைபெற்றுவரும் வழக்கின் திடீர் திருப்பமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண் விட்ஜா. இவர் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக குறி ரூ 70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக இந்திய அரசிடம் புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து இவ்வழக்கு தமிழக அரசின் உத்தரவின்படி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், “அந்த பெண்ணுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என ஆர்யா தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யாவின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. பணப்பறிப்பில் ஈடுபட்ட வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என தெரிய வந்துள்ளது. இருவரும் சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ஆர்யா போல் நடித்து வெளிநாட்டு இளம் பெண்ணிடம் 2 பேர் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.