யூசுப் கான் இந்தியாவின் பெருமை – பாஜக தலைவருக்கு பிரபல நடிகை குட்டு!

Share this News:

மும்பை (08 ஜூலை 2021): புதன்கிழமை காலமான திரையுலக ஜாம்பவான் திலீப் குமார், (யூசுப் கான் ) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவருக்கு நடிகையும் -அரசியல்வாதியான உர்மிளா மாடோண்ட்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைமுறைகளின் இதயங்களை ஆட்சி செய்த இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் குமார் (முகமது யூசுப் கான்) 1922 டிசம்பர் 11 அன்று பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்தார்.

அவர் ஒரு நடிகரானபோது, பம்பாய் டாக்கீஸின் தலைவராக இருந்த தேவிகா ராணி அவரை திலீப் குமார் என்று பெயர் மாற்றி அழைத்தார். அதுவே அவரது நிரந்தர பெயராக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாள் நோய்வாய் பட்டிருந்த குமார் தனது 98 வயதில் மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலை காலமானார். அவரது மறைவை இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தலைவர்களும் பொதுமக்கள் பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஹரியானா பாஜக ஐடி செல் மற்றும் சமூக ஊடகத் தலைவர் அருண் யாதவ் தனது இரங்கல் செய்தியில் “திரைப்பட உலகில் ஒரு இந்து பெயரை வைத்து பணம் சம்பாதித்த முகமது யூசுப் கான் (திலீப் குமார்) மரணம் இந்திய திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு! துயரமடைந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மாவுக்கு கடவுள் அமைதி அளிப்பார் என்று நம்புகிறேன், ”என்று யாதவ் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு கடுமையாக பதிலளித்த நடிகை ஊர்மிளா மாடோண்ட்கர், “உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் பணம் சம்பாதிக்க ஒரு இந்து பெயரை வைத்திருந்தார் என்று கூறி நம் நாட்டையே அவமானப்படுத்துகிறீர், ஒரு முஸ்லீம் இந்து பெயர் வைத்திருப்பதால் உங்களுக்கென்ன பிரச்னை? அவர் எப்பேர்ப்பட்ட சேவை செய்துள்ளார் என்று தெரியுமா? கார்கில் போரில் உயிர் நீத்தவர்களின் விதவைகளுக்கு அவர் பேருதவி புரிந்துள்ளார். உங்களைப்போன்றவர்களின் இரட்டை வேடத்தை மேலும் மேலும் வெளிப்படுத்தாதீர்கள்.” என்று நடிகை ஊர்மிளா தெரிவித்துள்ளார். ஊர்மிளா சிவசேனாவின் தலைவர்களில் ஒருவர் குறிப்பிடத்தக்கது.

யாதவின் ட்வீட்டுக்கு பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.


Share this News:

Leave a Reply