எனக்கும் அந்த அனுபவம் உண்டு – யுவன் சங்கர் ராஜா தகவல்!

380

சென்னை (10 அக் 2020): இந்தி தெரியாமல் விமான நிலையத்தில் நானும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளதாவது:

“நான் போட்ட டீ ஷர்ட் இவ்ளோ வைரலாகும்னு நான் எதிர்பார்க்கல. சும்மா யதேச்சையா பண்ணுனதுதான். ஆனா அந்த டிஷர்ட்ல இருந்த ‘I am a tamil speaking Indian’ங்குற வார்த்தைகள் உண்மைதானே. அதுல எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இப்பவும் இல்ல. என்னோட கருத்து அது. ஏன்னா எனக்கு சில கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கு.

வெற்றிமாறன் சாருக்கு நடந்த மாதிரியே எனக்கும் ஏர்போர்ட்ல ஒரு அனுபவம் இருந்திருக்கு. நான் நிறைய பயணிக்கிறவன். ஒருமுறை கீழக்கரை போய்ட்டு திரும்ப மதுரை வந்தப்போ அங்கே இருக்கிற ஆபீஸர்ஸ் என்கிட்ட இந்தில ஏதோ கேட்டாங்க. ‘எனக்குப் புரியல’ன்னு சொன்னேன். உடனே அவங்க எல்லாரும் அவங்களுக்குள்ள ஜோக் அடிச்சு என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாம இப்போ பாம்பே ஏர்போர்ட் போய் அங்கே இருக்குற எல்லாப் பணியாளர்களும் தமிழில்தான் பேசணும்னு சொன்னா அது தப்புதானே? அப்புறம் ஏன் இங்கே மட்டும் இந்தியில பேசணும்னு எதிர்பார்க்குறாங்க?

இந்தியாவோட அழகே இவ்ளோ வேற்றுமைகளிலும் ஒற்றுமையா இருக்கிறதுதானே. நான் இந்தி மொழியை எதிர்க்கல. நிறைய இந்திப் படங்கள் இசையமைச்சிருக்கேன். இந்திப் பாடல்கள் பாடியிருக்கேன். எனக்கு அந்த மொழி மேல எந்த வெறுப்பும் கிடையாது. அதைத் திணிக்காதீங்கன்னுதான் சொல்றேன். அந்த டிஷர்ட் பார்த்தப்போ எனக்கு இந்தக் கசப்பான அனுபவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அதனாலதான் அந்த டிஷர்ட் போட்டேன். மத்தபடி எனக்கு எந்த அரசியல் அஜெண்டாவும் கிடையாது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.