BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

May 25, 2018

கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.