சென்னை கல்லூரியினுள் மாணவர்கள் குழு சேர்ந்து மோதிக்கொண்டதைத் தொடர்ந்து கல்லூரி இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை கல்லூரி மாணவர்கள் அடிக்கடி கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் நடந்து வருகின்றன. நேற்று மதியம் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து உருட்டுக்கட்டை, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரசாந்த், தனசேகர் ஆகிய 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும் காவல்துறையினர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மாணவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல், இருக்க கல்லூரியில் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மோதலில் ஈடுபட்டதாக பி.ஏ மூன்றாமாண்டு படிக்கும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயன், பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாணவர்கள் மோதலை தொடர்ந்து கல்லூரிக்கு இன்றும், நாளையும் (4-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு கல்லூரி வாசலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் முன்னர் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-க.கா.செ
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed