சாகுபடிக்கு உங்கள் கண்ணீரின் நீரே போதும்! Featured

விவசாயிகளே
நாட்டின்
அட்சய பாத்திரமான நீங்கள்
பிச்சைப் பாத்திரத்திடம்
கையேந்தலாமா?
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்

நீங்கள் இதுவரை வடித்த
கண்ணீரைக் கொண்டே
இருபோக சாகுபடியை
இங்கே முடித்திருக்கலாம்.
அழுகிய காயங்களிடம்
மருந்து கேட்காதீர்கள்.

வெளிச்சத்தின் புத்திரர்களே
விழி ஈரம் துடைத்துத்
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்

அதிகாரப் பசியெடுத்த
ஆதிக்கக் கழுகுகளுக்கு
இதயம் இல்லை.
செவிகளும் கூட
சேர்ந்தார்போல் செத்துவிட்டன
அவற்றின் கண்களும்
கல்லறைக்குப் போய்விட்டன

இறக்கத்தில் கிடக்கும்
அவைகளிடம்
இனியும்
இரக்கத்தை எதிர்பார்க்கலாமா?

தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்

உங்கள் கண்ணீர் பார்த்து
வான தேவதை வரம் கொடுப்பாள்.
ஈர ஈரமாய்க் கரம்கொடுப்பாள்.

தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்.

-ஆரூர் தமிழ்நாடன்