பாவேந்தர் பிறந்தநாள் கவிதை! Featured

தமிழுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பாவேந்தருக்கு நினைவேந்தல்.

செவியுதிர கவிதையெலாம் விழுந்த காலம்
....செழிப்பான தமிழ்க்கவிதை இவரே செய்தார்.
தவிப்பினிலே வாய்களுக்குத் தண்ணீர் போல
....தமிழன்னை தாகத்தைத் தணித்த மைந்தர்.
கவிஞருக்குக் காட்டாக இவரே என்று
....கனற்கவிஞன் பாரதியும் சொல்லி வைத்தான்.
புவியினிலே பாரதிக்குப் பாதை நெய்தார்
....புரட்சியான கருத்தெல்லாம் இவரின் வேரே!

மிகையின்றி சொல்கின்ற ஒருவர் பெரியார்
....மேதினியில் இவரைத்தான் கவிஞர் என்றார்
வகையற்ற தமிழினத்தை வாழ வைக்க
....வரிசையிலே இவரைப்போல் கவிஞர் வந்தால்
திகைப்பற்று தீர்த்திடலாம் தமிழர் இன்னல்
....தெளிவாக இவர்கவிஞர் முதலாய் ஈற்றாய்.
தகைமையிலே தமிழ்க்குடியின் மடமை போக்கி
....தன்மானம் மண்மானம் காத்திட் டாரே!

மதியொன்று முகங்காட்டும் முகில் கிழித்து
....மன்னுயிரும் மகிழ்ந்திடவே வானில் தோன்றும்
நதியொன்று நடைபோடும் பெருக் கெடுத்து
....நாட்டினிலே வளத்தினையே நல்கிப் போகும்.
அதுபோன்றே பாவேந்தர் கவிதை ஆம்ஆம்
....ஆழியிலே முத்தாக அமையக் கண்டே
இதமாகச் சொன்னவரோ அறிஞர் அண்ணா
....இனமானப் பாவேந்தைச் சுட்டி னாரே!

குயிலொன்று பாடுவதை கேட்க இனிக்கும்
....குளிர்கின்ற மனமெல்லாம் கோடி இன்பம்
மயிலொன்று ஆடுவதை காண இனிக்கும்
....மயங்காதார் யாருந்தான் இருக்க மாட்டார்.
வியப்பாகும் அருவியதன் முழவு மினிக்கும்
....வண்டிசைக்கும் யாழினிக்கும்; உள்ளம் பூக்கும்
இயல்பாக பாவேந்தர் பாவு மினிக்கும்
....என்கின்றார் பேரறிஞர் தமிழின் தென்றல்.

இன்றிருந்தால் பாவேந்தர் யாது செய்வார்
....எழுந்திடுதே கேள்வியொன்று எண்ணிப் பார்க்க
கன்றினுக்குப் பாலின்றி கறத்தல் போல
....கனிதமிழர் நலம்நோகப் பிடுங்கு வோரை
வென்றுவரும் முழக்கத்தை கவிதை யாக்கி
....வேள்விகளாய் தம்பாடல் ஆக்கிக் கொள்வார்
நன்றிதுவோ எனக்கேட்பார் அவரின் நாவில்
....நர்த்தனமாய் தமிழ்மகளும் ஆடு வாளே!

- இ.ஹ

Last modified on Saturday, 29 April 2017 17:02