Sunday, 25 June 2017 06:26

என்னவளே...!! சிறுகதை Featured

ன்று முழுவதுமே ராபியா உறங்கவில்லை.

சுபுஹுக்கு பாங்கு அழைப்பு வந்த மறுகணமே உளு செய்துவிட்டு தன் மகளுக்காக அழுது துஆ செய்தாள். தொழுகை முடிந்ததும் விரிப்பிலேயே சற்று கண் அயர்ந்துவிட்டாள்.

திடுக்கிட்டு விழிப்பு வந்து எழுந்தபோது அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஹசீனாவைத் தேடினால் அவள் அங்கு இல்லை.

ரவூப் - ராபியா தம்பதியினருக்கு ஹசீனா இரண்டாவது மகள், மூத்த மகள் ருபீனா. அவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து வைத்து இப்பொழுது அவளுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ருபீனாவின் கணவர் ஹமீத் உள்ளூரில் ஒரு மளிகைக் கடையில் பணிபுரிகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லையென்றாலும் நல்ல மனிதர்.

ஹசீனா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். எனவே அவளுக்கு நிகரான மணமகன் அமைய வேண்டுமே என்று தேட ஆரம்பித்தார்கள். பல்வேறு முயற்சிக்குப் பிறகு நல்ல மாப்பிள்ளை ஒருவர் கிடைத்தார்.

ராபியாவின் கணவர் ரவூப் துபையில் ஒரு க்ளீனிங் கம்பெனியில் சொற்ப வருமானத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 வருடமாக அங்கு வேலை என்றாலும் சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் இல்லை. மிகவும் சிரமப்பட்டு சேகரித்துத்தான் மூத்த மகள் ருபீனாவுக்கு திருமணம் செய்து வைத்தார்; இளைய மகள் ஹசீனாவை படிக்க வைத்தார். தற்போது ஹசீனாவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து, இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டாரும் விரும்ப கடன் பெற்றாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் மருத்துவர் இடியைப் போட்டார்.

நம் செல்ல மகள் ஹசீனாவுக்கா இப்படி ஒரு பிரச்சனை? உடைந்துபோனார்கள் ராபியாவும் ரவூபும்.

ஹசீனாவுக்கு பேசி முடிக்கப்பட்ட மாப்பிள்ளை ரியாஸுக்கு குவைத்திலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் மேனேஜர் பணி. உயர் பதவி, நல்ல சம்பளம் என அனைத்து வகையிலும் ஹசீனாவுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை. என்றாலும் பொருளாதார ரீதியில் மாப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு நாம் சமமில்லையே என்று ரவூபுக்குத் தயக்கம் இருந்தது. எனினும் ரியாசுக்கு இதுகுறித்து எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரிடம் பேசிய வகையில் ரவூப் குடும்பத்தினர் தெரிந்துகொண்டனர்.

ஹசீனாவுக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி. ஊரில் உள்ள மருத்துவரிடம் காண்பித்தபோது சாதாரன வயிற்று வலிதான் என்று மருந்து கொடுத்தார். எனினும் சரியாகவில்லை. பக்கத்து ஊரில் உள்ள பெண் மருத்துவரிடன் அழைத்து சென்றாள் ராபியா. ஹசீனாவை பரிசோதித்த மருத்துவர் கூறிய வார்த்தைதான் ராபியாவை இடியாய்த் தாக்கியது.

அடுத்த நாள் டவுனில் உள்ள பெரிய மருத்துவமனையில் முழு பரிசோதனை செய்து வாருங்கள் என்று எழுதித்தந்து, ‘அதற்க்குப் பிறகுதான் எதுவும் கூற முடியும். கடவுளிடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறிவிட்டார்.

இன்று காலை டவுன் பெரிய மருத்துவமனைக்கு ஹசீனாவை அழைத்துச் செல்ல ராபியா தீர்மானித்திருந்தாள். துணைக்கு தம்பி ரிஸ்வானையும் அழைத்திருந்தாள். இந்த நிலையில் பக்கத்தில் படுத்திருந்த ஹசீனாவைக் காணவில்லை. கலவரப்பட்டு எழுந்து வீட்டில் தேடியபோது அடுத்து உள்ள அறையில் வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடந்தாள் ஹசீனா.

"ஹசீனா என்னம்மா செய்யுது?" என்று விசாரித்தாள் ராபியா.

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மனதில் பல்வேறு கனவுகளை சுமந்து இருந்த ஹசீனாவுக்கு வெளியில் கூற முடியாத கவலை. "இல்லம்மா ஒன்னுமில்லை" என்றாள் ஹசீனா.

"கவலைப்படாதே அல்லாஹ் பாதுகாப்பான்" என்றாள் ராபியா

ஆட்டோவில் டவுன் பெரிய மருத்துவமனைக்குச் சென்று, டோக்கன் போட்டு வாங்கி, மருத்துவரிடம் காண்பித்து, அவர் கூறிய அனைத்துப் பரிசோதனைகளும் செய்து முடித்தார்கள்.

ரிசல்ட்டுகளை மருத்துவரிடம் காண்பிக்க காத்திருந்த நேரத்தில், துபையிலிருந்த ரவூப் ராபியாவின் கைப்பேசியில் அழைத்தார். அதுவரை ரவூபுக்கு மகளின் நிலை குறித்து மேலோட்டமாக மட்டுமே தெரியும் என்றாலும் ராபியா இன்று முழு விவரமும் கூறவேண்டும் என்று இருந்தபோது அழைப்பு வந்தது.

ராபியாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ரவூப்பிடம் பேசினாள். மேம்போக்காக, மருத்துவமனையில் இருப்பதையும் ஹசீனாவுக்கு உடல் நலமில்லை என்பதையும் கூறி மருத்துவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து பின்பு சொல்கிறேன் என்று கூறிக்கொண்டு இருந்தபோது நர்ஸ் அழைப்பது கேட்டது.

பின்பு பேசுவதாகக் கூறி போனை கட் செய்துவிட்டு மருத்துவரின் அறைக்குச் சென்றார்கள்.

ஸ்கேன், இரத்த பரிசோதனை ரிப்போர்ட்டுகளைப் பார்த்த மருத்துவர் நோயை உறுதிபடுத்திவிட்டார். ‘கவலைப்பட வேண்டாம். ஆரம்ப ஸ்டேஜ்தான். கீமோதெரப்பியில் சரியாகிவிடும்’ என்றார். ஆனால், ‘முழுமையாக குணமடைந்த பின்பே திருமணம் குறித்து நினைக்கமுடியும். அதுவரை ஹசீனாவின் திருமணம் குறித்து சிந்திக்கக் கூடாது’ என்று கூறிவிட்டார். தாக்கிய அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், ‘மருத்துவ செலவு தற்போதைக்கு 4 லட்சம் வரை ஆகலாம்’ என்ற அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்தார்.

இத்தனையையும் ராபியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பீறிட்டு வெடித்தது அழுகை. ஹசீனாதான் தேற்றினாள். "அல்லாஹ் தந்த வியாதியை அவனே போக்குவான். கவலைப்படாதேம்மா” என்றாள்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு ரவூப்பிடமிருந்து மீண்டும் போன் வந்தபோது அனைத்தையும் ராபியா விவரித்துவிட்டாள். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளில் இருக்கும் ரவூப், ஹசீனாவின் மருத்துவச் செலவுக்கு என்ன செய்வார்? துபையில் கவலையுடன் வேலையிலும் நாட்டம் செல்லாமல் பரிதவித்தார் ரவூப்.

"எப்படியெல்லாம் நினைத்தேன் அல்லாஹ்வே எங்களுக்கு ஏன் இந்த சோதனை" என்று அழுது துஆ கேட்க தொடங்கிவிட்டாள் ராபியா.

இதற்கிடையே ஹசீனாவில் உடல் நிலை அறிந்து ஹசீனாவிற்கு பேசி முடித்துள்ள ரியாசின் வீட்டில் புயல் அடிக்க தொடங்கியது. ரியாசுக்கு வேறு பெண்ணைப் பார்ப்போம் என்றெல்லாம் அங்கு விவாதங்கள் தொடங்கிவிட்டன.

இந்த நேரத்தில் ரியாஸ் ஊருக்கு வருவதாக ஒரு தகவல் கிடைத்தது. திருமணத்திற்கு ஒரு மாதம் இருந்தாலும், வீட்டில் வேலைகள் இருப்பதால் அவனின் வாப்பா அபூபக்கர் ரியாஸை முன் கூட்டியே அழைத்திருந்தார். இதனால் கம்பெனியில் முன்கூட்டியே விடுமுறை கேட்டிருந்த ரியாஸுக்கு ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்த நாள் புறப்படவுள்ளதாக ரவூபுக்கு போனில் தகவல் அளித்தான் ரியாஸ். ஊரிலும் வாப்பா, அக்கா, தங்கை உள்ளிட்டவர்களிடமும் தகவல் அளித்தான்.

ஆனால் ஹசீனாவின் நிலையை கூறி "இப்போதைக்கு திருமணம் நடக்கப்போவதில்லை எனவே உன் விடுமுறையை ரத்து செய்துவிடு" என்று ரியாசின் வீட்டில் வலியுறுத்தினர். அனால் "வழக்கமாக ஊர் வருகிறேன். அவ்வளவுதான்" என்றான் ரியாஸ்.

ஏற்கனவே ஹசீனாவின் திருமணத்திற்காக ஊர் செல்லவிருந்த ரவூப், மகளின் நிலையை அறிந்ததிலிருந்து நிலைகுலைந்து போயிருந்தார். உடல் நிலை குன்றியிருக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்று ரவூப் அவரது நிறுவனத்தில் கூறினார். உடனே அவருக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து, கூடுதல் விடுமுறையும் அளித்து கம்பெனி அவரை ஊருக்கு அனுப்பி வைத்தது.

ரியாஸும் ரவூபும் அடுத்தடுத்த தினங்களில் ஊர் வந்து சேர்ந்தனர்.

வழக்கமாக ஊர் வரும்போது அக்கா சுமையா குடும்பம், தங்கை ரிபாயா குடும்பம் என எல்லோருக்கும் குவைத்திலிருந்து பொருட்களை அள்ளி வரும் ரியாஸ் தற்போது எதுவும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே வாப்பா அபூபக்கர் கேட்டிருந்த கை கடிகாரம் மட்டும் வாங்கி வந்திருந்தான்.

திருமண ஆசையில் இருந்த ரியாஸுக்கு ஹசீனாவின் நிலை யை அறிந்ததிலிருந்து மனதை ஏதோ செய்தது. என்ன நினைத்தானோ, திடீரென்று பைக்கை எடுத்துக்கொண்டு ஹசீனாவின் வீட்டுக்கு பறந்தான்.

வீட்டிற்கு வந்த ரியாஸைக் கண்டதும் ரவூப் நிலை தடுமாறி உள்ளே அழைத்தார். உள்ளே நுழைந்த ரியாஸ் ரவூபிடம், “இன்ஷா அல்லாஹ் இன்று மாலை வீட்டுக்கு வாருங்கள் வாப்பா, என் சகோதரிகள் முன்னிலையில் பேச வேண்டும்” என்று கூறிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல். உடனே கிளம்பி வந்துவிட்டான்.

செய்வதறியாது தவித்த ரவூபும், ராபியாவும் குழம்பிப் போனார்கள். அன்று மாலை ரியாஸின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

வீட்டில் குடும்பம் சகிதமாக அனைவரும் இருந்தனர். ரியாஸின் வாப்பா அபூபக்கர் இருவரையும் உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.

"நேரா விஷயத்துக்கு வருகிறேன். ரியாஸ் ஹசீனாவை இப்போதே திருமணம் செய்யனும் என்று சொல்கிறான்" என்றார் ரியாசின் வாப்பா அபூபக்கர்.

இப்படி ஒரு செய்தியை ரவூபும் ராபியாவும் எதிர்பார்க்கவில்லை.

அப்போது ரியாஸ் உள்ளிருந்து வந்தான். “ஆமா மாமா. நான் உங்க வீட்டுக்கு வரும் முன்பே நேரா டவுன் ஹாஸ்பிடலுக்கு போய் ஹசீனாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கிற டாக்டரைத்தான் பார்த்தேன். அவர்கிட்டே எல்லா விஷயத்தையும் கேட்டேன். அவரோட அட்வைஸை கேட்ட பின்புதான் உங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டுக்கு வரச் சொன்னேன். இன்ஷா அல்லாஹ் ஓரிரு தினங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கேன். இங்கு எல்லோருக்கும் சம்மதம் உங்கள் சம்மதம் மட்டுமே இப்போதைக்கு அவசியம்" என்றான் ரியாஸ்.

ரவூப் ராபியா தம்பதியினருக்கு ஒருபுறம் சந்தோஷம். மறுபுறம் குழப்பம், கவலை.

அப்போது அபூபக்கர், “எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. அல்லாஹ் எல்லாவற்றையும் சரியாக்குவான்" என்றார்.

அடுத்த சில தினங்களில் மிக எளிமையாக ரியாஸ் ஹசீனா திருமணம் நடந்தது.

அன்று மாலை ரியாஸ் இரு தரப்பு குடும்பத்தினரையும் அழைத்து வைத்து, "இன்று முதல் ஹசீனா என் மனைவி. அவளின் இன்ப துன்பங்களில் எனக்கு அதிக பங்குண்டு. ஆகவே இனி ஹசீனாவின் சிகிச்சை செலவும் முழுவதும் என்னுடையது. மருத்துவரிடம் எல்ல விசயமும் பேசிவிட்டேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஹசீனா குணமாவாள் அவளுக்காக உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது துஆ மட்டுமே" என்றான்.

குடும்பம் அனைத்தும் ஒருமித்த குரலில் அவனது கோரிக்கையை ஆமோதித்தது.

அப்போது ரியாஸை தனியாக அழைத்த அபூபக்கர் கண்களில் நீர் கசிய கூறினார், “ஹசீனாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உனக்கு வேறு பெண்ணை பார்க்கலாம் என்று உன் சகோதரிகள் நினைத்தாலும். நான் அப்படி நினைக்கவில்லை. இப்பொழுது உன் முடிவை உன் சகோதரிகளும் புரிந்து கொண்டார்கள். உன் சின்ன வயசில் உன் தங்கை ரிபாயா பிறந்த அடுத்த கனமே உன் உம்மா ரஹீமா இறந்தது உனக்கு நினைவு உள்ளதா என்று தெரியாது? ஆனால் உன்னைத் தனியாளாக நான் வளர்த்தேன். எல்லோரும் தாயில்லா பிள்ளை ஒரெயொரு ஆண்பிள்ளை என்று உன்னை என்னென்னவோ சொன்னார்கள். படிக்க வைத்தேன் ஆளாக்கினேன். இன்று நல்ல நிலையில் இருக்கிறாய். அதேபோல நல்ல மனதும் குணமும் உன்னிடம் இருக்கப் பெற்றதில் சந்தோஷம்.”

“புகழும் பெருமையும் அல்லாஹ்வுக்கே” என்றான் ரியாஸ்.

- அதிரை ஜாஃபர்

 

Last modified on Sunday, 25 June 2017 12:38
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.