பாம்பு சட்டை - எதார்த்த சினிமா!

Sunday, 16 April 2017 15:29 Written by  இந்நேரம் Published in சினிமா

கீர்த்தி சுரேஷ் தமிழில் முதலில் ஒப்புக் கொண்ட படம் இதுதான். ஆனால் காலம் தாழ்ந்து வந்துள்ளது.

பாபி சிம்ஹா தன் அண்ணனை இழந்த அண்ணியுடன் ஒரே வீட்டில் 3 வருடமாக வாழ்கிறார். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை தன் அண்ணிக்கு நல்ல வாழ்வு அமைத்து தர வேண்டும் என்று உள்ளார். சென்னையில் தண்ணி கேன் போடும் வேலையில் சேர்கிறார் பாபி. அங்கு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். அவரை துரத்தி துரத்தி காதலில் விழ வைக்க, ஒரு வழியாக திருமணம் வரை வர, கீர்த்தியின் அப்பா சார்லி, பாபி சிம்ஹா அண்ணியுடன் இருப்பதை குத்திக்காட்டுகிறார்.

அந்த நேரத்தில் ஒரு ஷேர் ஆட்டோக்காரர் ஒருவரை தன் அண்ணிக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று பாபி முயற்சி செய்ய அவருக்கு 8 லட்சம் வரை பணத்தேவை உள்ளது. அவரது கடனை இவர் அடைக்க முயற்சி செய்ய, தெரியாமல் ஒரு கள்ளநோட்டு கும்பலிடம் மாட்ட, உள்ள பணத்தையும் இழந்து நிற்கின்றார். பிறகு அந்த பணத்தை மீட்டாரா? அண்ணியின் திருமணத்தை நடத்தினாரா? கீர்த்தியை கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

பாபி சிம்ஹாவுக்கு ஜிகர்தண்டாவுக்கு பிறகு கொஞ்சம் நடிக்கும் கதாபாத்திரம், அவரும் அதை சிறப்பாகவே செய்துள்ளார். சோகமே உருவான முகமாக அசத்தினாலும் ரொமான்ஸில் இன்னும் எத்தனை பயிற்சி எடுத்தாலும் பாஸ் ஆக மாட்டார் போல.

இதுவரை புல் மேக்கப்பில் பார்த்த கீர்த்தி இதில் மேக்கபே இல்லாமல் நடித்துள்ளார். இதுவரை வந்த கீர்த்தி சுரேஷ் படங்களிலேயே இவை தான் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம், குடும்ப வறுமை சாக்கடை அள்ளுபவரின்(சார்லி) மகள் என இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்ட துயரங்களை சந்திக்க வேண்டும் என யதார்த்தமாக நடித்துள்ளார். அதேபோல் சார்லி, குருசோமசுந்தரம் போன்ற நடிகர்கள் எல்லாம் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும், கதாபாத்திரங்களாகவே வாழ்கின்றனர்.

பணம் பத்தும் செய்யும் அந்த பத்தையும் செய்யாமல் ஒருவனால் இருக்க முடியுமா? கஷ்டத்தின் போதும் பணத்தை தூக்கி எறிபவன் எவனும் இல்லை. அதையும் மீறி தூக்கி எறிந்து ஒரு வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் மக்களும் உள்ளார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் ஆடம் தாஸ்.

இப்படி தவறு செய்து பிழைப்பதற்கு ரோட்டில் அம்மனமாக ஓடலாம் என்ற வசனத்தை மட்டும் வைக்காமல், செய்யாத தவறு, ஆனால், செய்ய தோன்றியதே தவறு தான் என நினைத்து பாபி துணியில்லாமல் ரோட்டில் ஓடுவது, சோமசுந்தரத்தை பாபி கடத்தி வைத்துவிட்டு, அவர் மனைவியிடம் பணம் கேட்கும் போது அவர் கர்ப்பம் என தெறிந்து அவரே மலையிலிருந்து இறங்கி ஓடி வருவது என பல இடங்களில் கிளாப்ஸ் அள்ளுகின்றது.

படத்தின் இரண்டாம் பாதியில் குத்து பாட்டு இருக்கா? என இந்த படத்திலேயே கிண்டலுக்கு ஒரு காட்சி வரும். அதற்காக இத்தனை யதார்த்தமான படத்தில் குத்து பாட்டு வைப்பது நியாயமா? அதை தவிர்த்திருக்கலாம். பாபி பணத்திற்காக பாக்ஸிங் செய்யும் காட்சி கொஞ்சம் செயற்கைத்தனம்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு சென்னை திரிசூலத்தை ஒரு ரவுண்ட் அடித்தது போல் உள்ளது அத்தனை யதார்த்தம், அஜீஸ் பின்னணி இசை படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ஸ்லோ மூவ் என்றாலும் யதார்த்தத்தை சொல்லும் சினிமா.

- தல தளபதி

Comments   
0 #1 கார்த்திகேயன் 2017-04-17 16:32
இந்நேரம் தளத்தில் வரும் விமர்சனங்கள் மிகவும் நன்றாக உள்ளன. புகழ்ச்சியாக வெறுமனே சிங்கி அடிக்காமல், நிறை குறைகளை சுட்டிக்காட்டி தல தளபதி எழுதும் விதம் அருமை. தொடருங்கள்.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.