தனுஷ் விவகாரத்தில் மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

By இந்நேரம் April 21, 2017

மதுரை(21 ஏப் 2017): தனுஷ் எங்கள் மகன் என்று கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் அளித்த மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து கதிரேசன் மீனாட்சி யாரென்றே எனக்கு தெரியாது. ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கதிரேசன் தரப்பினர், தனுஷ் தங்கள் மகன்தான் என ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர். அதுமட்டுமில்லாமல் தனுஷின் உடலிலுள்ள அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மருத்துவக்கலூரி டீன் தலைமையிலான டாக்டர்கள் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கதிரேசன் தம்பதியினர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடம்பில் இல்லையென்றாலும், சில தழும்புகள் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

Rate this item
(0 votes)