ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்: சினிமா விமர்சனம்!

By இந்நேரம் July 15, 2017

சில தோல்விகளுக்குப் பிறகு அதர்வா மிகவும் எதிர்பார்க்கும் படம் அதேவேளை ரசிகர்களும் எதிர்பார்க்கும் படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அதர்வா மதுரைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகின்றது. வந்த இடத்தில் அந்த நபர் இல்லை என்பதால் சூரியுடன் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றார்.

இதில் அதர்வா செம்ம ப்ளேபாய், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் கழட்டிவிட்டு, அடுத்த பெண்ணிற்கு கொக்கிபோடும் கேரக்டர்.

இவரின் வலையில் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 4 பேர் விழ, இதில் யாரை கிளைமேக்ஸில் கரம் பிடிக்கின்றார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார் இயக்குனர் இளவரசு.

அதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம் செம்ம தீனி. அடிதடி என்றில்லாமல் படம் முழுவதும் காதல் இளவரசனாகவே வலம் வருகின்றார். பெண்களை ஏமாற்றும் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் எளிதில் ஈர்க்கின்றார். அதிலும் சூரியிடம் அவர் தன் கதையை ஒவ்வொன்றாக சொல்லும் காட்சி, காதலிகளை எப்படி கழட்டி விடுவார் என்பதற்கு வைக்கும் டுவிஸ்ட் ரசிக்க வைக்கின்றது.

ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதி 4 பேருமே செம்ம கலர்புல்லாக வந்து செல்கின்றனர். படமே ஜாலி தான் என்பதால் அவர் அவருக்கான கதாபாத்திரத்தை நன்றாக நடித்து செல்கின்றனர்.

சூரி மதுரையை கலக்கும் ரவுடி என முதல் அரை மணி நேரம் காமெடி என்று ஏதேதோ செய்கின்றார். எந்த ஒரு இடத்திலும் சிரிப்பு வரவே இல்லை, மிகவும் பொறுமை சோதித்து என்ன தான் சொல்ல வருகின்றார்கள் என்ற நிலைமைக்கு படம் செல்ல, அதன் பிறகு சுதாரித்து எப்படியோ கதைக்குள் வந்து படம் நன்றாகவே நகர்கின்றது.

அதிலும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் வைத்து சூரியை அதர்வா நிலைகுலைய வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடி. அதில் ஒரு வெடியை சூரிக்கே அதர்வா வைப்பது செம்ம கலாட்டா. அப்படியே மயில்சாமி கதாபாத்திரம் போகின்ற போக்கில் சசிகுமார், சமுத்திரக்கனியை கிண்டல் செய்வதெல்லாம் சூப்பர்.

படம் ஜாலியாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாகியுள்ளது தெரிகின்றது. ஆனால், படத்தில் எதற்கு அத்தனை பாடல்கள். கமர்ஷியல் படம் என்றாலே 6 பாடல் இருந்தே ஆகவேண்டுமா, இமானின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் அடிக்கடி வருவது கேண்டினுக்கு எழுந்து செல்ல வைக்கின்றது.

பெரிய அளவில் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் பார்க்கலாம்

-தல தளபதி

Rate this item
(0 votes)