பண்டிகை - சினிமா விமர்சனம்!

Sunday, 16 July 2017 14:15 Written by  இந்நேரம் Published in சினிமா

பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்துள்ள படம் பண்டிகை.

சிறிய வயதில் இருந்து தனக்கு தேவையானது அடித்தால் தான் கிடைக்கின்றது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணா. இந்த அடிதடி எல்லாம் வேண்டாம் எப்படியாவது வெளிநாடு போய் செட்டில் ஆகவேண்டும் என்று ஒரு ஹோட்டலில் வேலைப்பார்கின்றார்.

கிருஷ்ணா இருக்கும் அதே ஏரியாவில் சூதாட்டத்தில் இருக்கும் சொத்தை எல்லாம் தாதா என்பவரிடம் இழந்து வாழ்க்கை என்னாகுமோ என்று குழப்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் சரவணன்.

ஒருநாள் கிருஷ்ணாவின் பலத்தை பார்த்த சரவணன், அவரின் பணக்கஷ்டம் அறிந்து தன் சுயலாபத்திற்காகவும் தாதா நடத்தும் ஒரு சண்டைப் போட்டியில் பங்கேற்க வைக்கின்றார். கிருஷ்ணாவும் அனைவரையும் வெற்றி பெற்று நிறைய பணம் சம்பாதிக்கின்றார்.

ஒருகட்டத்தில் சரவணனுக்கு தன் பணத்தை எல்லாம் ப்ளான் செய்து தான் தாதா ஏமாற்றி பிடிங்கினார் என்பது தெரிய வருகின்றது. அந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கிருஷ்ணா உதவியுடன் ஒரு ப்ளான் செய்கின்றார். அந்த ப்ளான் சக்சஸ் ஆனதா? பணம் கிடைத்ததா? என்பதை விறுவிறுப்பான ஆக்‌ஷனில் கூறியுள்ளார் பெரோஸ்.

சென்னையில் யாருக்குமே தெரியாமல் நடக்கும் ஒரு சண்டைப்போட்டி, இரத்தம் தெறிக்க, தெறிக்க ஒரு கும்பலே கூடி நின்று பார்க்கின்றது. பணத்தை விட இங்கு இருப்பவர்களுக்கு ஒரு சைக்கோ மனநிலை என்பதை மிக தெளிவாக காட்டியுள்ளார் பெரோஸ்.

கிருஷ்ணா அவ்வப்போது நல்ல படங்களில் நடித்து வருகிறார், அப்படி ஒரு படமாக தான் பண்டிகை அமைந்துள்ளது, வெளிநாடு செல்ல வேண்டும், அதற்கு பணம் வேண்டும் என்ற போது கூட சண்டைக்கு செல்லாத கிருஷ்ணா, ஆனந்தியிடம் பேச வேண்டும், அதற்கு போன் வேண்டும் என அதற்காக சண்டைக்கு செல்வது ஒரு ஆணின் மனநிலையை மிக யதார்த்தமாக காட்டியுள்ளனர்.

ஆனந்தி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் உள்ளது. சரவணன் பருத்திவீரனுக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம், தன் வீடு, கடை எல்லாம் ஒரு ரவுடியிடம் அடமானத்தில் உள்ளது. கர்ப்பினியாக இருக்கும் தன் மனைவி, இதற்கிடையில் தன் பணத்தை மீட்கவேண்டும் என அத்தனை எமோஷ்னல்களிலும் ஸ்கோர் செய்கின்றார்.

படத்தின் முதல் பாதி செம்ம சுவாரசியமாக செல்கின்றது. கிளைமேக்ஸ் காட்சியே இதுதான் என்று நினைத்தால், அதை இடைவேளையில் முடித்து இரண்டாம் பாதியில் வேறு ஒரு திசையில் படம் பயணிக்கின்றது. ஆனால், கிளைமேக்ஸ் கொஞ்சம் நீள...ம் போல் தோன்றியது.

விக்ரமின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை கலக்கல், பல இடங்களில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் இரவு நேரங்கள், தியேட்டரில் நடக்கும் சண்டைகள் என அனைத்து நிழல் உலகத்தையும் மிக அழகாக நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

வன்முறை கலந்த த்ரில்லர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.