குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பதா?: கமல்ஹாசன் பாய்ச்சல்!

Sunday, 16 July 2017 17:15 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(16 ஜூலை 2017): கேரள நடிகை குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி சென்னையில் பேட்டி அளித்தபோது, கேரளாவில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். பாலியல் வன்முறைக்கு உள்ளானவரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், தேசிய பெண்கள் ஆணையம், தானாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

நடிகையின் பெயரை தெரிவித்ததற்காக, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதப்போவதாக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட கமல்ஹாசன் இதுபோன்று செயல்படுவது, தவறான முன்மாதிரி ஆகிவிடும். பாதிக்கப்பட்ட நடிகையோ அல்லது ரசிகர்களோ அவர் மீது வழக்கு தொடர முடியும். எனவே, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் கேட்பேன். சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். நான் யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல. குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது.' என்று எழுதியுள்ளார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.