ரசிகர்களின் ஆபாச அர்ச்சனை: பதறிய நடிகர் விஜய்!

By இந்நேரம் August 09, 2017

சென்னை(09 ஆகஸ்ட் 2017): நடிகர் விஜய் ரசிகர்கள் பத்திரிகையாளர்கள் மீதும் பெண்கள் மீதும் ஆபாசமாக பதிவிட்டது தொடர்பாக ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணையதள பத்திரிகை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, நான் இடைவேளையில் வெளியே வந்துவிட்டேன் என்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன். இதையொட்டி விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பேர் எனது புகைப்படத்துடன் ஆபாச தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கொடுத்த புகார் மனு தொடர்பாக ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நடிகர் விஜய் அறிக்கை விடுத்து உள்ளார்.

சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிக்க கருத்து சுதந்திரம் உள்ளது. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Rate this item
(0 votes)