ஊடகங்களில் வெளிவருவது தவறான தகவல்: நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!

By ஜாஃபர் October 03, 2017

பெங்களூரு(03 அக் 2017): தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு விழாவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக பேசிய பிரகாஷ் ராஜ், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், தனது தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்கத் தயங்க மாட்டேன் என்றும் பிரகாஷ் ராஜ் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை பிரகாஷ் ராஜ் தற்போது மறுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,’தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி கண்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகளைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது உழைப்புக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை.

பத்திரிகையாளர்கள் கௌரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர்கள் மத்தியில் நான் பேசியபோது எனது கருத்தை நான் கூறியது உண்மைதான். அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அவர்களை யார் கொன்றார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த சம்பவங்களை யார் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனிதநேயமற்ற அந்த கொலைகளைக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்ததற்கான, என்னை நோக்கி கடுமையான விமர்சனங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன.

ஆனால், நான் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி, தனது கண்டனத்தையோ, கருத்தையோ பதிவு செய்யாதது ஏன்?. நாட்டின் குடிமகன் என்கிற முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது எனக்கு வலியையும், வேதனையையும், பயத்தையும் அளிக்கிறது. நான் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவரைப் பற்றியும் பேசவில்லை. நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன். நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் நான் கேள்வி கேட்கிறேன். இதைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. மற்றபடி இந்த விவகாரம் தொடர்பாக எனது தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பதாக நான் எந்த இடத்திலும் கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Rate this item
(0 votes)