நடிகர் சந்தானம் சிகிச்சை பெற்ற மருத்துவமனை மீது பாஜகவினர் முற்றுகை!

By இந்நேரம் October 10, 2017

சென்னை(10 அக் 2017): நடிகர் சந்தானம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மீது பாஜகவினர் முற்றுகை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(40). இவர் அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வருகிறார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும், சண்முக சுந்தரமும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி சந்தானம் சண்முகசுந்தரத்திடம் பெரிய தொகை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சண்முகசுந்தரம் கட்டுமானப் பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சந்தானம் பலமுறை சண்முகசுந்தரத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லையாம்.

இதையடுத்து இருவரும் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் சந்தானம். அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அவர் சந்தானத்திடம் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மீதியுள்ள பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக நடிகர் சந்தானமும், அவரது மேனேஜர் ரமேஷ் என்பவரும், வளசரவாக்கம் சவுத்ரி நகரில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சண்முகசுந்தரமும், அவரது சட்ட ஆலோசகரும் பாஜ வக்கீலுமான பிரேம்ஆனந்த்(38) என்பவரும் இருந்துள்ளனர். நடிகர் சந்தானம் சண்முகசுந்தரத்திடம் பணம் குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த சந்தானமும், அவரது மேனேஜரும் சேர்ந்து சண்முகசுந்தரத்தையும், பிரேம்ஆனந்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களும் பதிலுக்கு இவர்களைத் தாக்கியுள்ளனர். இருதரப்பும் அடிதடியில் இறங்கி கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டுள்ளனர். இந்த அடிதடியில் இருதரப்பினரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் விசாரணை நடத்தினார். இதையடுத்து நடிகர் சந்தானமும், சண்முகசுந்தரமும், ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே காயமடைந்த சண்முகசுந்தரமும், பிரேம்ஆனந்தும் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சந்தானமும், அவரது மேனேஜரும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சந்தானம் மருத்துவமனையை பாஜ பிரமுகர்கள் சிலர் முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனையில் தனது காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து அவர் வேறு ஒருவரது காரில் ஏறி தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீசார் மருத்துவமனை சென்று சந்தானத்தின் காரை காவல்நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, இருதரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்து வந்தபிறகுதான் விசாரிக்க முடியும். அதன்பிறகே முழுமையான தகவல் தெரியவரும். அதையடுத்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Rate this item
(0 votes)