ரஜினி, கமல் மீது நடிகர் விஷால் அதிருப்தி!

By இந்நேரம் February 05, 2018

மதுரை(05 பிப் 2018): காவிரி விவகாரத்தில் அமைதி காப்பதாக ரஜினி கமல் மீது நடிகர் விஷால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட ரத்தனவிலாஸ் உணவகத்திற்கு நடிகர் விஷால் வருகை புரிந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "மதுரை மாவட்டத்தில் படபிடிப்பு நடந்தாலே ஒவ்வொரு ஊரும் எனது சொந்த ஊராக நினைத்து கொள்வேன். ஏன் என்றால் நானும் மதுரைகாரன்தான். தற்பொழுது சண்டை கோழி இரண்டாவது படபிடிப்பில் இருக்கிறேன். இன்னும் 40 நாள் இப்பகுதியில் தான் சூட்டிங் நடக்க இருக்கிறது. அதில் நடித்து கொண்டு இருந்ததால்தான் காலையில் வரமுடியவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவித்தார்கள் என்றால் நானும் தனிகட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.

ஏற்கனவே ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து விட்டனர். இருந்தாலும் காவேரி பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை. அது வருத்தமாக இருக்கிறது. இனிமேலாவது காவேரி பிரச்சனைக்கு இருவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த காவேரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

தற்பொழுது மத்திய பட்ஜெட்டானது ஏழைகளுக்கு இல்லை பணக்காரங்களுக்கான பட்ஜெட். இந்த நாட்டில் 76 ஆயிரம் தான் விவசாயிகளின் கடன் உள்ளது அதை இந்த மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவிற்கு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனில் அக்கரை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. அது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.

அதை தொடந்து ரத்தனவிலாஸ் முன்பு திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு பேசும்போது, என்னால் முடிந்த அளவுக்கு நல்லது செய்கிறேன். அதுபோல் நீங்களும் இந்த சமூகத்திற்கு நல்லது செய்யுங்கள். குறிப்பாக பெண்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும்." என்றார்.

Rate this item
(0 votes)