சவரக்கத்தி - திரைப்பட விமர்சனம்!

By இந்நேரம் February 11, 2018

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இயக்குநர் ராம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சவரக்கத்தி.

நாயகன் ராம், இவரின் பிரதான தொழில் சவரம் செய்தல். நடிகை பூர்ணா இவரின் மனைவி. இரண்டு குழந்தைகள் என வெகுளியாய் இருக்கிறார்.

ஆனால் பேச ஆரம்பித்தார் என்றால் உலகத்தையே விற்றுவிடுவார் என தோன்றும். பைக்கில் குடும்பத்துடன் மைத்துனரின் பதிவு திருமணத்திற்காக செல்கிறார்.

போகிற வழியில் விபத்து போன்ற ஒரு நிகழ்வு. எதிர் முனையில் பார்த்தால் மிஷ்கின். டான் போல சில கூட்டாளிகளை வைத்துகொண்டு இவர் அட்டகாசம் செய்கிறார்.

வழக்கம் போல ராம் வாய் விட, ஒரு வித்தியாசமான பகை வெறி மிஷ்கினுக்குள் பற்றி விடுகிறது. இதனால் அவர் ராம் மீது மிகவும் கோபத்துடன் விரட்டி, விரட்டி பிடித்து, தீர்த்து கட்ட நினைக்கிறார்.

மாலை ஆறு மணி என ஒரு காலக்கெடு அவருடன் சுற்றுகிறது. எதற்காக இப்படி. அப்படி என்ன இவரின் பின்னால்.

ஒரு பக்கம் தன் பூர்ணா நிலை மாறி போக நடந்து போன சம்பவங்களால் கேளாத காதை வைத்து இவர் படும் அவஸ்தைகள் பல. அதற்குள் இப்படியா என கேட்குமளவுக்கு ஏதேதோ நடந்துவி்றது.

பின் என்ன பெரிய சைஸ் வெட்டு கத்தியை தீட்டுகிறார் மிஷ்கின். ஒரு பக்கம் சவரக்கத்தியுடன் காணாமல் போன தன் மனைவி குழந்தைகளை தேடி அலைகிறார் ராம்.

கடைசியில் ராம் சிக்கினாரா, மிஷ்கினின் மனநிலை என்னானது? சவரக்கத்தி வென்றதா, வெட்டுக்கத்தி பேசியதா என்பது தான் படத்தின் கதை.

இயக்குனர் ராம். அவரின் படங்கள் எப்படி இருக்கும் என்பது படப்பிரியர்களுக்கு நன்கு தெரியும். ஒரு அழுத்தமான விசயத்தை இப்படத்திலும் பதியவைக்கிறார். கேரக்டருக்காக உருண்டு பிரண்டிருக்கிறார்.

பிச்சை கேரக்டரில் இவரின் பங்கு மிக முக்கியமானது. கடைசிவரை பயந்து பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பிரச்சனைகள் சுமூகமாக முடியும் நேரத்தில் மீண்டும் வாண்ட்டாக வந்து அனைவரும் மாட்டிகொள்ளும் விதம் காட்சிகளை நீட்டிப்பதோடு காமெடியும் கலந்து விட்டது.

இயக்குனர் மிஷ்கின். ஒரு வித்தியாசமான போக்கில் படத்தை கொடுக்கக்கூடியவர். இப்படத்திலும் அவரின் கதையமைப்பு வழக்கமான ரகம் தான். ஆனாலும் அவரே இறங்கி நடித்திருக்கிறார்.

ராமுக்கு வில்லன் இவர் தான். பிச்சையை தேடி போகிற வழியில் வேறொரு கும்பலிடம் மாட்டிக்கொள்வது கொஞ்சம் ட்விஸ்ட். இவரும் நிற்கவில்லை. ஓயாது ஓடிய பிழைப்பு தான்.

நடிகை பூர்ணா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் அவரின் முயற்சியை வரவேற்க வேண்டும். இப்படத்தில் வீராப்பாய் வசனம் பேசும் ஒரு முழுமையான கிராமத்து பெண்.

வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிடுவார். எல்லாம் என்றால் எல்லாம் தான். என்ன சொல்ல. படத்தில் பாருங்கள். ஆனால் பல இடங்களில் பீப் தான். பிறகு எதற்கு இது?? கர்ப்பிணியாக இருந்த போதும் ஓடிய பிழைப்பு தான்.

படத்தின் எளிமையான கதைக்கேற்ப போதுமான காட்சிகள். நிஜத்தை நிழலாய் காட்டாமல் உள்ளபடி காட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். சொல்ல வந்த விசயத்தை காட்சிகளாக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்.

கமர்சியல் படவுலகில், மசாலா ஜாலம் செய்யாமல் புதுமையான கதையாக கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.

தேவையான இடத்தில் மட்டும் இசையை பயன்படுத்தி பல இடங்களில் அமைதி காத்திருக்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி.

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் .

- தல தளபதி

 

Rate this item
(0 votes)