Sunday, 04 June 2017 22:44

கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா(பிசிசிஐ) 319 ரன்கள் குவிப்பு! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

பர்மிங்காம்(04 ஜூன் 2017): சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியின் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிசிசிஐ அணி 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களை குவித்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதி வருகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணி 9.5 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

ரோஹித் சர்மா 72 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இந்திய அணி சீராக ஓட்டங்கள் வித்து வந்தது. 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார்.

அப்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதையடுத்து கோஹ்லி களமிறங்கினார். இந்திய அணி 33.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது ரோஹித் சர்மா 77, கோஹ்லி 24 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து குறுக்கிடுவதால் இன்றைய போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசியிருந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் அவுட் ஆகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதையடுத்து களத்தில் இருந்த கோஹ்லியுடன் யுவராஜ் கை கோர்த்தார். யுவராஜ்சிங் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கோஹ்லி 58 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். அதைத் தொடர்ந்து கோஹ்லி அதிரடி வாணவேடிக்கை காட்டினார். மறுமுனையில் 29 பந்துகளில் யுவராஜ்சிங் அரைசதத்தைக் கடந்த நிலையில் ஹசன் அலி பந்தில் வெளியேறினார்.

இதனையடுத்து கோஹ்லியுடன் பாண்டியா ஜோடி சேர்ந்தார். பாண்டியா 8 பந்துகளில் 20 ஓட்டங்கள் குவித்தார். கோஹ்லி 68 பந்துகளில் 81 ஓட்டங்கள் சேர்த்தார். இதனையடுத்து 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்கள் குவித்துள்ளது.

Read 286 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.