ஜூலியும் ஓவியாவும் இல்லாத பிக்பாஸ் வீடு எப்படி இருக்கு? Featured

By இந்நேரம் August 09, 2017 889

ஜூலியும் ஓவியாவும் இல்லாத பிக்பாஸ் வீடு சுவாரஸ்யம் இழந்து காணப்படுகிறது.

வழக்கம்போல் ‘முட்டை கணேஷ்’ நிதானமாக உண்பதை சிநேகனும் மற்றவர்களும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தான் உண்டு தன் முட்டை உண்டு’ என்று கருமமே கண்ணாயினராக இருக்கிறார் கணேஷ்.

அதற்கு முன், காலையில் ‘ஆடுகளம்’ திரைப்படத்திலிருந்து ‘ஒத்த சொல்லாலே’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பானது. ஒற்றைச் சொல்லை அடிக்கடி சொல்லி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட காயத்ரி நடனம் என்ற பெயரில் எதையோ செய்தார், உடற்பயிற்சியோ என்னவோ. பிந்து மாதவியின் நடனம் தேவலை. ஓவியா இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ. வழக்கத்திற்கு மாறாக சக்தியும் இன்று அதிக ‘சக்தி’ வந்து பிந்துவுடன் ஆடினார்.

வையாபுரி மறுபடியும் வாக்குமூலப் படலத்தை உருக்கமுடன் ஆரம்பித்து விட்டார். இனி நல்ல கணவனாகவும் பொறுப்புள்ள தகப்பனாகவும் இருப்பதாகத் தன் மனைவிக்கு வாக்களித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பல குடும்பத்தலைவிகளுக்கு அவரவர்களின் கணவன்மார்கள் குறித்து இப்படி தோன்றலாம். ‘இந்த மனுசனை கொண்டு போய் அங்க ஒரு மாசம் தள்ளி விட்டு வந்தாத்தேன் திருந்துவாரு போல”

சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்காததாலும் உடல் உழைப்பினால் ஏற்படும் வலியினாலும் வையாபுரி புலம்பிக் கொண்டேயிருந்தார். இருந்தாலும் அவருடைய அந்த விரக்தி கூட காமெடியாகத்தான் உள்ளது.

பிக்பாஸ் சலவை மையம் என்பது task. தரப்படுகிற பழைய துணிகளை இரண்டு அணிகளும் துவைத்து தர வேண்டும். எந்த அணி அதிக எண்ணிக்கையிலான துணிகளை நன்றாக துவைக்கிறார்களோ, அந்த அணிக்கு மதிப்பெண்கள். சக்தி மற்றும் பிந்து மாதவி இதன் தரப்பரிசோதனையாளர்களாக இருப்பார்களாம். காலக்கொடுமை.

பணிபுரிவதற்காக அவர்களுக்கு தரப்பட்ட உடை நகைச்சுவையாக இருந்தது. மேக்கப் இல்லாத ரைசா, கண்டாங்கி சேலையில் அசல் ‘கிராமத்து கிளி’யாகவே மாறி விட்டார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் உடைகளை அவர்களே துவைத்துக் கொள்வார்களா, அல்லது வெளியில் இருந்து துவைத்து வருமா என்று பார்வையாளர்களுக்கு நீண்ட காலமாக இருந்த வரலாற்றுச் சந்தேகம் இன்று தீர்ந்து விட்டிருக்கும். குறைந்த எண்ணிக்கையிலான துணிகளை துவைப்பதற்கே அப்படி அலுத்துக் கொண்டார்கள் என்றால் தங்களின் துணிகளை எப்படி துவைப்பார்கள்?

சிநேகன் அணி கடின உழைப்பின் மூலம் துவைத்துத் தந்த துணிகளை, சக்தி நிராகரித்தது அநியாயம். பக்கத்தில் இருந்த எதிரணி காயத்ரி வேறு ஏத்திக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

எதிர்பார்த்தபடியே துணிதுவைக்கும் இந்த விளையாட்டில் மெலிதான சண்டை மூண்டது. தங்கள் அணி சிரமப்பட்டு துவைத்த துணிகளை சக்தி வேண்டுமென்றே நிராகரித்தார் என்று சிநேகன் வருத்தப்பட்டாரோ, என்னவோ. மூலையில் சென்று சோகத்துடன் அமர்ந்து விட்டார். சக்தி இதை யூகித்து விசாரித்த போது ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று மறுத்தார்.

ஆனால் இந்தச் சண்டை விரைவில் அடங்கி விட்டது பிக்பாஸிற்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆண்களின் சண்டை அத்தனை எளிதில் பற்றிக் கொள்வதில்லை. மேலும் அவர்கள் அற்ப விவகாரங்களை சண்டையாக எடுத்துக் கொள்வதில்லை

இன்றைய நாளில் சிநேகன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய ப்ரோமோவில் ஆரவை ரைசா வச்சு செய்வது போன்று காட்சி காண்பிக்கப்பட்டது. என்ன இருந்தாலும் ஜூலியும், ஓவியாவும் இல்லாத வீடு வீடல்ல. 

-தல தளபதி

 

Rate this item
(0 votes)