பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் கலாய்த்த கமல்! Featured

By இந்நேரம் August 27, 2017 1331

சென்னை(27 ஆகஸ்ட் 2017): பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் சூழலை நாசூக்காக கலாய்த்தார் நடிகர் கமல்.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை எபிசோட்டில், கமல் பிக்பாஸ் பங்களிப்பாளர்களுக்கிடையே கோர்ட் போன்று ஒரு காட்சி நடத்தினார்.

அதில் புகார் கொடுத்தவர் யார் மீது புகார் கொடுத்தாரோ அதுகுறித்து விளக்க வேண்டும், ஒருவர் வழக்கறிஞராகவும், யார் மீது புகார் உள்ளதோ அவர் குற்றவளி கூண்டில் நின்று தன் மீதான புகார் குறித்து மறுக்கக் கூடியவராகவும் விவாதிக்க வேண்டும்.இதுபோன்று காட்சி பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தது.

இதில் திடீரென எழுந்த நடிகர் வையாபுரி, "சிலர் புகார் அளித்தவர்களும் யார் மீது புகார் உள்ளதோ அவர்களும் கைகோர்த்து எந்த சலனமுமின்றி சமாதானமாகிவிடுகின்றனர். அதுபோன்று இல்லாமல், முறையாக விவாதிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் இல்லை அல்லது உள்ளது என்று நிரூபிக்கப் பட வேண்டும் என்று கமலிடம் தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர் பார்க்காத கமல், "ஆமாம் இப்போது அதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கின்றது" என்று பார்வையாளர்களை பார்த்து ஒரு நமட்டு பார்வை பார்த்தார். அதிலேயே மக்கள் கமல் யாரை குத்திக் காட்டுகிறார் என்று புரிந்துகொண்டனர்.

இந்நாள்வரை தர்மயுத்தம் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரனை வேண்டும் என்றும் எந்த தரப்பார் மீது தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டி வந்தாரோ அந்த அணியினரிடம் சரணடைந்தது குறித்தே கமல் நக்கலாக சுட்டிக் காட்டினார் என்பதை அனைவரும் தங்களது கரவொலி மூலம் உணர்த்தினர்.

Rate this item
(0 votes)