ஹிஜாப் தடை தீர்ப்பு எதிரொலி – பாதியில் வகுப்பறையை விட்டு வெளியேறிய மாணவிகள்!

Share this News:

பெங்களூரு (15 மார்ச் 2022): ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பாதியிலேயே தேர்வை புறக்கணித்து மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளனர்.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீர்ப்பை அடுத்து கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் தேர்வை புறக்கணித்து 35 இஸ்லாமிய மாணவிகள் பாதியில் வெளியேறினர். ஹிஜாப் அணிந்திருந்த அவர்கள் தேர்வு எழுதாமல் வெளியேறினர்.

மேலும் ஹிஜாப் அணியாமல் நாங்கள் வகுப்பிற்கு செல்ல மாட்டோம் என்று ஹிஜாப் வழக்கில் மனு தாக்கல் செய்திருந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த வழக்கில் மனுதாரர்களாக இருந்த இஸ்லாமிய மாணவிகள் மூன்று பேர் தீர்ப்பிற்கு பின்பாக பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் தீர்ப்பு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசினார்.

அதில், ஹிஜாப் அணியாமல் நாங்கள் வகுப்பிற்கு செல்ல மாட்டோம். எங்கள் மதத்திலும், குரானிலும் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவிக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. எங்கள் மதத்தில் இது அடிப்படை உரிமை கிடைத்தது என்று தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

அதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. குரானில் ஹிஜாப் பற்றி உள்ளது. ஆனால் கோர்ட்டில் அதை அடிப்படை உரிமை இல்லை என்று எப்படி சொல்ல முடியும். இது மிகவும் தவறு. ஹிஜாப் எங்கள் மதத்தில் முக்கியம். அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தனர் என்று தெரியவில்லை.

எங்கள் வழக்கறிஞர் இது தொடர்பான விவரங்களை எல்லாம் எடுத்துரைத்தார். ஆனால் அது எதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்வேறு ஆதாரங்களை கொடுத்த பின்பும் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் நாளை முதல் வகுப்பிற்கு செல்ல மாட்டோம். சொந்த நாடு மூலம் எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளது.

இதைச் சொல்ல கஷ்டமாக இருக்கிறது. எதை வைத்து அவர்கள் இது மத அடிப்படை உரிமை கிடையாது என்று கூற முடியும்? நாங்கள் கோர்ட் உத்தரவை மதிக்க மாட்டோம் என்று கூறவில்லை, ஆனால் நாங்கள் ஹிஜாப் இல்லாமல் வகுப்பிற்கு செல்ல முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம், என்று கூறி உள்ளனர்.


Share this News:

Leave a Reply