காலியாகும் பாஜக கூடாரம் – பாஜக அமைச்சரை தொடர்ந்து சமாஜ்வாதியில் இணையும் 13 எம்.எல்.ஏக்கள்!

Share this News:

லக்னோ (11 ஜன 2022): உ.பி. தொழிலாளர் துறை அமைச்சர், பா.ஜ.வில் இருந்து விலகியதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதிமூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உத்தரபிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அமைச்சரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்ததை அடுத்து இந்த தகவலை சரத் பவார் தெரிவித்துள்ளார்.

“உத்தரபிரதேசத்தில், நாங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போகிறோம்,” என்று சரத் பவார் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மாநிலத்தில் ஏற்படும் மாற்றத்தை நிச்சயம் காண்போம். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத துருவமுனைப்பு செய்யப்படுகிறது. இதற்கு உ.பி. மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அதேபோல மும்பையில் பேசிய சரத் பவார், வரும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

முன்னதாக பாஜகவிலிருந்து விலகிய அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, உத்தரபிரதேசத்தில் தலித்துகள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் மீது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அலட்சியம் காட்டியதே தன்னுடைய ராஜினாமாவுக்குக் காரணம் என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பிறகு, மாநிலத்தில் உள்ள மேலும் மூன்று பாஜக எம்எல்ஏக்களும் இதைப் பின்பற்றி கட்சியில் இருந்து வெளியேறினர். இதில் தில்ஹர் எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பில்ஹூர் எம்எல்ஏ பகவதி பிரசாத் சாகர் மற்றும் திந்த்வாரி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.

சுவாமி பிரசாத் மவுரியாவைப் போலவே, ரோஷன் லால் வர்மாவும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியில் சேர முடிவு செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


Share this News:

Leave a Reply