ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி கைது!

பிப்ரவரி 22, 2018 567

புதுடெல்லி(22 பிப் 2018): ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.2,919 கோடி கடன்கள் வாங்கினார். அந்த கடன்கள் இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3,695 கோடியாக உயர்ந்து உள்ளது. ஆனால் விக்ரம் கோத்தாரி இந்த தொகையை வேண்டும் என்றே செலுத்தவில்லை.மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கடன்கள் வாராக்கடன்கள் ஆகி உள்ளன.

இது தொடர்பான புகாரின் பேரில், விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து உள்ளன. சி.பி.ஐ. பதிவு செய்து உள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய 7 வங்கிகளுக்கு விக்ரம் கோத்தாரி வட்டியுடன் ரூ.3,695 கோடி திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.

வங்கிகளை மோசடி செய்வதற்கு விக்ரம் கோத்தாரி சட்டத்துக்கு புறம்பான வழிகளை நாடி இருப்பது சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ளது.

இந்தநிலையில், வங்கி மோசடி தொடர்பாக 2 நாள் விசாரணைக்கு பிறகு ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது . முன்னதாக டெல்லி, கான்பூரில் விக்ரம் கோத்தாரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.3000 கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்பசெலுத்தவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து விக்ரம் கோத்தாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...