திரிபுராவில் ஆட்சி மாற்றத்தை அடுத்து மூன்றே நாட்களில் 1000 வன்முறைகள்!

மார்ச் 06, 2018 740

பெலோனியா (06 மார்ச் 2018): திரிபுராவில் சிபிஎம் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு மூன்றே நாட்களில் 1000 வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

திரிபுராவில் வரும் 8 ஆம் தேதி பாஜக ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை நேற்று அகற்றப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் வெற்றி ஊர்வலத்தின்போது, ஒரு கும்பல் சிலையை அகற்றியதாகச் சொல்கிறது. திடீரென்று அந்த இடத்தில் புல்டோசர் எப்படி வந்தது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. சுமன் மஜும்தார் என்பவரிடம் உதய்பூரைச் சேர்ந்த ஆஷிஷ்பால் என்பவர் புல்டோசரை வாடகைக்கு எடுத்துள்ளார். இதனால் சிலை அகற்றப்பட்டது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.

''கடந்த 3 நாள்களில் 1,000 வன்முறைச் சம்பவங்களில் 514 சி.பி.எம் தொண்டர்கள் காயமடைந்துள்ளதாகவும். 196 வீடுகள், 64 கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன'' என்று சி.பி.எம் கட்சியின் திரிபுரா மாநிலச் செயலாளர் பிஜன்தர் கூறியுள்ளார்.

மேலும் திரிபுராவில் உள்ள பல தெருக்களுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தெருக்களின் பெயர்களும் விரைவில் மாற்றப்படும் என தெரிகிறது.

மேலும் பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றிய பாடங்களுக்கு பதிலாக இந்திய தலைவர்கள் பாடங்கள் வைக்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைபோல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...