ஹிஜாபுடன் சாதிக்கும் முஸ்லிம் பெண் உடற்பயிற்சியாளர்!

மார்ச் 11, 2018 955

திருவனந்தபுரம் (11 மார்ச் 2018): தடைகளை உடைத்து ஹிஜாபுடன் உடற்பயிற்சியாளராக (Body builder) சாதனை புரிந்து வருகிறார் கேரளாவை சேர்ந்த மாஜிஜியா பானு (Majiziya Banu).

கோழிக்கோட்டைச் சேர்ந்த 23 வயதான மாஜிஜியா பானு, பல் மருத்துவம் பயின்று வருகிறார். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடைய இவர் பாடி பில்டராக, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் நடந்த மாநில அளவிலான மிஸ்டர் கேரளா போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே பலமுறை வென்றிருந்தாலும் இந்த வெற்றியை மாஜிஜியா பெரிய வெற்றியாக கருதுகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், "நான் ஒரு ஆண் போன்று பயிற்சி அளிக்கப் பட்டேன். எனினும் ஒரு முஸ்லிம் பெண்ணாக அதுவும் பாடி பில்டராக இருப்பது சவாலான காரியம். ஆனால் ஹிஜாப் அணிந்த நிலையிலும் கூட எவ்வித சிரமமும் இன்றி சாதிக்க முடியும் என்று காட்டியுள்ளேன். எகிப்து , ஈரான் போன்ற நாடுகளில் ஹிஜாப் அணிந்து முஸ்லிம் பெண்கள் இதுபோன்று சாதித்து வருவதை முன் உதாரணமாக எடுத்து செயல் படுகிறேன். எனக்கு எல்லா வகையிலும் பின்புலமாக இருக்கும் என் பெற்றோருக்கு நன்றி. பெண்களின் கனவுகளை யாரும் சிதைக்கக் கூடாது." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...