மத்திய அரசுக்கு எதிராக மும்பையை அதிர வைத்த விவசாயிகள்!

March 12, 2018

மும்பை (12 மார்ச் 2018): சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் மும்பையில் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மஹாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புனே நகரில் இருந்து மும்பைக்கு 50 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம் வந்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா(ஏஐகேஎஸ்)அமைப்பு விவசாயிகளை திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புனேயில் இருந்து செவ்வாய்கிழமையில் இருந்து மும்பைக்கு நடந்து வந்துள்ளனர். இந்த விவசாயிகள் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சாலை ஓரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ளதால் மும்பை நகரம் குலுங்குகிறது.

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் விவசாயிகள் பொராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் வருகையால் மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!