வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ!

மார்ச் 16, 2018 657

பெங்களூரு (16 மார்ச் 2018): வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் மற்றும் ராணுவத் தளபதி ராவத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த மார்ச் 04 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் தலைமை தாங்கினார்.

தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன், பொதுச் செயலாளர் இலியாஸ் முகமது தும்பே, யாஸ்மின் ஃபரூக்கி, தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அப்துல் சத்தார், டாக்டர் மஹ்பூப் அவத், வழக்கறிஞர் ஜாஹிர் ஹுசேன் சித்திக், தயாலுல் இஸ்லாம், எம்.கே. மனோஜ் குமார், ராஜேந்திரப் பிரசாத் பாண்டியா, டாக்டர் தஸ்லிம் அஹமது ரஹ்மானி, டாக்டர் நிஜாமுதீன் கான், முகமது காமில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், கீழ்கண்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை:

விஜய் மல்லைய்யா வங்கி மோசடிக்கு பிறகு, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி, விக்ரம் கோத்தாரி ஆகியோரின் மிகப் பெரிய வங்கி மோசடிகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் வர்க்கத்தினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் கூட்டுச் சேர்ந்து செய்ததால், இந்த மோசடி வெற்றிக்கரமாக நடந்திருக்கிறது. பொது மக்களிடம் இருந்து சிறிய கடன் தொகையை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்ளும் வங்கி அதிகாரிகள், பல கோடிகளை கொள்ளையடித்த கார்ப்பரேட் அதிகாரிகளிடம் தாராளமாகவும், கண்ணை மூடிக்கொண்டும் நடந்து கொள்வது வேதனைக்குரியது. வங்கி மோசடிகள் செய்தவர்கள் மீது பாரபட்ச மற்ற விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்யவும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கவும் வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோருகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் ஸ்திர தன்மைக்கு ஆபத்து:

பன்முகப் பண்பாடு பல மத நம்பிக்கைகள் பல மொழிகள் கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், மதவாத சக்திகள் வெற்றி பெற்றிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. தனது கவலையை தெரிவித்துக் கொள்கிறது. அந்தப் பகுதியில் பல காலமாக பிரிவினை இயக்கங்களும், ஒரு டஜன் ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கே நாகாலாந்து மாநிலத்துடன், மத்திய அரசு ரகசிய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. திரிபுராவைத் திண்டாட கோரும் குழுவுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது. இந்த குறுகிய நோக்கு கூட்டணி, தேசத்துக்கு மரண அடி கொடுப்பதாக அமையும். நாகாலாந்திலும், மேகாலயாவிலும் பொதுமக்களின் உண்மையான வாக்குகளை பெறாமல், இயற்கைக்கு முரணான கூட்டணி அமைத்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது அந்த மாநில ஸ்திர தன்மைக்கு அபாயத்தை ஏற்படுத்தும். இந்த மாதிரியான சந்தர்ப்பவாத கூட்டணி ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். பல கொள்கை அரசியல் கொண்ட அந்த மாநிலங்களில், தற்போதைய வெற்றி பாசிச கொள்கைகள் வளர வழி செய்யும் என்பதால் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.

ராணுவத் தளபதி ராவத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்:

அஸ்ஸாமில் சமுதாய மற்றும் மதரீதியில் அரசியல் குழுக்கள் வளர்ந்து வருவதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தனது எல்லையை மீறி பேசி இருப்பதை எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அவரது பேச்சு உண்மைக்கு புறம்பானது. மேலும் அது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கோருகிறது.

கண்டுகொள்ளப்படாத விவசாயிகளின் துயரங்கள்:

இந்திய விவசாயிகளின் துன்பங்களையும், துயரங்களையும் மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்வதில்லை. 2012 லிருந்து 2015 வரை 10,000 க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பயிர் தோல்வி, வறட்சி, சந்தையில் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சி, வங்கிக்கடன் மற்றும் வட்டிச் சுமை, உரம் மற்றும் விதை பற்றாக்குறை போன்ற பல்வேறு விவசாய பிரச்சினைகள் குறித்து தேர்தல் நேரத்தில் கட்சிகள் குரல் கொடுத்தாலும், பதவிக்கு வந்ததும் மறந்து விடுகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. போராடும்.

உ.பி. ஹரியானாவில் தொடரும் மனித உரிமைகள் மீறல்:

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கடந்த 10 மாதங்களில் நடைபெற்ற 921 போலிஸ் என்கவுண்டர்களில் 38 பேர்கள் கொல்லப்பட்டதாக வெளியான அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. யோகி அரசு பதவியேற்ற பிறகு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு வெளியே இப்படிப்பட்ட கொலைகளை நிகழ்த்த காவல்துறைக்கு தாராளமாக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஹரியானா காவல்துறை என்கவுண்டர்களில் 11 பேர்களைக் கொன்றிருக்கிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இப்படி மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக சட்ட மீறல்களை முன்நிறுத்தி, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஜார்கண்ட் மக்கள் இயக்க அழிப்பு:

உரிமை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜார்கண்டில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வந்தது. அங்கே பசு பாதுகாப்பு என்ற பெயரில் சங்பரிவார்களால் 12 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில பாஜக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எந்த சமரசமும் இன்றி ஜனநாயக ரீதியில் சட்டப்போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் அரசியல் சட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு விரோதமாக பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் இயக்கத்தை மாநில அரசு தடை செய்திருக்கிறது. மாநில அரசின் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக தேச மக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஜார்கண்ட் அரசுக்கு எதிராக பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஒத்துழைப்பை நல்குகிறது.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்:

சிரியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அங்கே கவ்தா நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், குழந்தைகளும் அண்மையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வல்லரசு நாடுகள் தலையீட்டால் அங்கே மினி உலகப் போர் நடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு ஐ.நா. உதவியுடன் பஷார் அல் அஸாத் ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும். அமைதி நிலை நாட்டப்பட்டு, அனைத்து எதிர் கட்சிகளுடன் சமசரப் பேச்சு நடத்தப்பட வேண்டும்.

விண்ணை முட்டும் எரிபொருள் விலை:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின், பண மதிப்பிழப்பு, விஞ்ஞான பூர்வமற்ற ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, விலை உயர்வுகள், விண்ணை முட்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளால் சாதாரண மக்களின் வாழ்க்கை படுமோசமாகி விட்டது. 2014-ல் இருந்ததை விட தற்போது கச்சா எண்ணெய்யின் விலை பாதியாக குறைந்து விட்டது. அதேவேளையில் அரசின் வரி விதிப்பால் எண்ணெய் விலை உயர்ந்து அது பொதுமக்கள் தலையில் விழுந்துவிட்டது. இதுபோன்ற பா.ஜ.கவின் மக்கள் விரோத கொள்கைகளை எஸ்.டி.பி.ஐ. கடுமையாக கண்டிக்கிறது.

வி.எச்.பி.யின் ராம் ராஜ்ஜிய ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும்:

அயோத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தொடங்கப்பட்ட ராம் ராஜ்ஜிய ரத யாத்திரை 5 மாநிலங்கள் வழியாக 41 நாட்கள் பயணித்து கடைசியில் தமிழ்நாட்டில் போய் முடிய இருக்கிறது. ரத யாத்திரை என்ற போர்வையில் மீண்டும் வி.எச்.பி. தனது துவேஷ பிரச்சாரத்தை மீண்டும் துவங்கியுள்ளது. ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற அதன் பிரச்சாரத்தால் மததுவேஷம் வார்க்கப்பட்டு அமைதியும், மத நல்லிணக்கமும் கொடுக்கப்படுகிறது. பாபரி மஸ்ஜித் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதித்துறைக்கு மதிப்பளிக்காமல் வி.எச்.பி. நடந்துகொள்வது தெளிவாகிறது. ஆகவே வி.எச்.பி–யின் அரசியல் சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை, நாட்டின் நலன் கருதி மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. எச்சரிக்கை விடுக்கிறது.

வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்:

தற்போது வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களால் மோசடிக்கு வழி இருப்பதால், அதை அடியோடு நிறுத்தி விட்டு, பழைய வாக்கு சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். அந்த இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை. உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியிடப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய வழி இருப்பதாக கூறி, பல நாடுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்கு பதியும் முறையை நிறுத்திவிட்டன. ஆகவே, மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையை காக்கும் விதத்தில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடைபெற மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...