பாஜக கூட்டணியிலிருந்து மற்றொரு கட்சியும் வெளியேறியது!

மார்ச் 24, 2018 928

புதுடெல்லி (24 மார்ச் 2018): பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளது.

மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளை பிரித்து, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி, கடந்த ஆண்டு ஜூனில் துவங்கி, 104 நாட்கள் பெரும் போராட்டத்தை கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர், சிறைகளில் அடைக்கப்பட்டனர். கூர்க்கா மக்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அப்போது உறுதியளித்த மத்திய அரசு இதுவரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அக்கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் எல்.எம்.லாமா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில், டார்ஜிலிங் லோக்சபா தொகுதிகளை, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, பாஜகவுக்கு விட்டுக்கொடுத்தது. பாஜக சார்பில், 2009ல் ஜஷ்வந்த் சிங் இத்தொகுதியில் போட்டியிட்டார், 2014ல் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிட்டார். இவர்களுக்காக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தேர்தல் பணியாற்றியது. மேற்கு வங்கத்தின் நுழைவாயில் டார்ஜிலிங். அதை பாஜகவுக்காக திறந்து வைத்தோம். பல வருடங்களாகவே எங்கள் மக்கள், தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என காத்திருந்தோம். ஆனால், பாஜக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. டார்ஜிலிங் இப்போது நம்பிக்கையை இழந்ததற்கும், அங்கு அசாதாரண சூழல் நிலவுவதற்கும், பாஜகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவசேனா, தெலுங்கு தேசம் வரிசையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளமை பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...