உத்திர பிரதேசத்தில் தொடரும் கொடூரம் - கர்ப்பிணிப் பெண் வன்புணர்வு!

April 15, 2018

லக்னோ (15 ஏப் 2018): உத்திர பிரதேசம் லக்னோ அருகே 35 வயது கர்ப்பிணிப் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் தனது கூட்டாளிகளுடன் கற்பழித்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கோவிலில் வைத்து கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டார். அதில் கோவில் குருக்கள், பாஜக பிரமுகர் உள்ளிட்டோரும் குற்றவாளிகளாக கைது செய்யப் பட்டுள்ளனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே உத்திர பிரதேசத்தில் இன்னொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. லக்னோ நகரின் புறநகர்ப் பகுதியான மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கர்ப்பிணியை ஏமாற்றி கடத்திச் சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த கும்பல் கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக கற்பழித்தனர். இதில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார். உடனே 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

அந்தப் பக்கமாக சென்ற உள்ளூர் மக்கள் பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மயக்கம் தெளிந்தார். நடந்த சம்பவம் பற்றி அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். வாலிபர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்பேரில் 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Search!