வன்புணர்வுக்கு தூக்குத் தண்டனை - அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஏப்ரல் 21, 2018 653

புதுடெல்லி (21 ஏப் 2018): 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்புணர்வு செய்யப் பட்டால் தூக்குத் தண்டனை என்ற அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீர் சிறுமி உட்பட வட மாநிலங்களில் அதிகரித்து வரும் சிறுமிகள் வன்புணர்வு தொடர்கதையாகி வரும் நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த சூழலில், 5 நாள் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று காலை நாடு திரும்பினார். இந்தியா வந்தவுடன் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையின் அவரசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பந்தமான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சரவை கூட்டம் தொடங்கும் முன்பு காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...