நான் செய்த தவறுதான் என்ன? - நீதிக்கு போராடும் டாக்டர் கஃபீல்கான்!

ஏப்ரல் 23, 2018 1116

டாக்டர் கஃபீல்கானை யாரும் அவ்வளவு மறந்துவிட முடியாது. உத்திர பிரதேசம் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் ஹீரோவாக ஜொலித்தவர் இன்று வரை சிறையில் வாடுகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் மூளைவீக்க நோயாளிகளுக்கான பிரிவில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பச்சிளம் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன. இந்த சமயத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்த மருத்துவர் கஃபீல்கான், மீடியாக்களாலும் பொது மக்களாலும் அதிகம் பாராட்டப் பட்டவர்.

ஆனால் அவர் அவ்வாறு செய்த நல்ல செயல் ஆளும் உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு பிடிக்காமல் குழந்தைகள் மரணத்திற்கு டாக்டர் கஃபீல் கானே காரணம் என்பதாக குற்றஞ் சாட்டி இன்று வரை பிணையில் கூட வரமுடியாத நிலையில் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி முறையான சிகிச்சை இன்றி அவதியுறுவதாக அவரது மனைவி சபிஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் கஃபில்கானி மனைவி சஃபிஸ்தா செய்தியாளர்கள் முன்னிலையில் கஃபில்கான் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தைக் காட்டினார். அதில், " ‘சம்பவம் நடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நான் விடுமுறை பெற்றிருந்தேன். அன்றைய இரவு வாட்ஸ்அப் மூலம்தான் எனக்கு மருத்துவமனையில் மோசமான சூழல் நிலவுவது பற்றிய தகவல் கிடைத்தது. ஒரு மருத்துவராகவும், தந்தையாகவும், பொறுப்புமிக்க இந்தியக் குடிமகனாகவும் என்ன செய்யவேண்டுமோ அதையே அன்று செய்தேன். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் செத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு குழந்தையையும் காப்பாற்ற முடிந்தவரை போராடினேன். புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தில் இருந்து நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்துமாறு 14 முறை நினைவூட்டப்பட்டபோதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்விக்கான பொது இயக்குனர், மருத்துவக் கல்விக்கான பொது தலைவர் போன்றோர்தான் குற்றவாளிகள். இன்று அவர்களது நிர்வாகக் கோளாறுகளை மறைக்க எங்களை பலிகடா ஆக்கி சிறையில் தள்ளிவிட்டார்கள்.

இவ்விவகாரத்தில் நான் மீடியாக்களில் புகழப் பட்டது முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆத்திரம் கொண்ட நிலையில், தன்னிடம் மிரட்டும் தொணியில் அவர் பேசினார். மேலும், நான் காவல்துறையில் சரணடையச் செய்ய தனது குடும்பத்தினர் மிரட்டப் பட்டனர். இப்போது சிறையில் வாடுகிறேன்." என்று அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை வெளியிட்ட கஃபீல்கானின் மனைவி சபிஸ்தா, ‘என் கணவர் எந்த குற்றமும் செய்யாதவர். அவர் அப்படிச் செய்திருந்தால் அந்த மோசமான சூழலில் மருத்துவமனைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்திருக்கலாம். பல சமயங்களில் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை தனது சொந்தப் பணத்தில் வாங்கித் தந்திருக்கிறார். அந்தக் கோர சம்பவத்திற்கு நிர்வாகக் கோளாறுகளே காரணம்’ எனக்கூறி தனது கணவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...